
மூத்த ஊடகவியலாளர்
எம்.எஸ். அமீர் ஹூசைன்
இலங்கை பல்லினங்களைக் கொண்ட ஒரு தேசமாகும். இந்த நாட்டில் பிரதானமாக சிங்களவர்கள், தமிழர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பேர்கர் என்ற இனங்களுக்குரிய தனித்துவமான இன, மத, மொழி, கலாசார பண்பாட்டு பாரம்பரியங்களை பேணிப் பாதுகாத்து கடைபிடித்து வருவதில் ஒவ்வொரு இனங்களும் மிகவும் கவனமாக செயற்பட்டு வருகின்றன.

காலத்திற்கு காலம் இத்தகைய இனங்களுக்குள் தமிழர்களும் முஸ்லிம்களும் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளனர். தொடர்ச்சியாக நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வடக்கில் நடைபெற்று வந்த சிவில் யுத்தம் காரணமாக தமிழர்கள் கடுமையான நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வந்திருக்கின்றனர். இதே போன்ற சவால்களை முஸ்லிம்களும் 1915 ஆம் ஆண்டில் இருந்து எதிர்நோக்கி வந்திருக்கின்றனர்.

ஆனாலும் ஒரு போதும் தம்மை தனிப்பட்ட இனமாக அடையாளப்படுத்திக் கொண்டாலும் இனங்களுக்கிடையிலான பிளவை அல்லது வேறுபட்ட நடத்தையை ஒருபோதும் விரும்பவில்லை. 1990 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து சுமார் 100,000 முஸ்லிம் குடும்பங்கள் இரண்டு மணித்தியால அவகாசத்தில் வெளியேற்றப்பட்டாலும் தெற்கில் முஸ்லிம்கள் எப்போதும் சிங்கள மக்களுடன் மிகவும் நெருக்கமான உறவைப் பேணி வந்திருக்கின்றனர்.

அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு, பேரினவாத சிங்கள தலைமைத்துவத்தின் கீழான பிரதான அரசியல் கட்சிகளுடன் இணைந்து தேசிய அரசியலில் பங்களிப்பு செய்து வருதல், 04 தசாப்த கால சிவில் யுத்தம் நடைபெற்ற போது அரசாங்கத்திற்கு வழங்கி வந்த பங்களிப்பு என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

இருந்தாலும் காலத்திற்கு காலம் ஒரு சில தீவிர போக்குடைய சிங்கள தலைவர்களின் வழிநடத்தலில் தூண்டப்படுகின்ற சிங்கள அரசியல் பின்னணிகளால் அவ்வப்போது வன்முறைகளுக்கும் பொருளாதார மற்றும் மத ரீதியான இழப்புக்களுக்கும் முகம் கொடுத்து வந்துள்ள ஒரு இனம்தான் முஸ்லிம்கள்.
இத்தகைய நெருக்கடிகளின் உச்ச கட்டமாக 2010 ஆம் ஆண்டிற்கு பின்னர் வந்த காலப்பகுதிகளை குறிப்பிடலாம்.
இன்றைய காலப்பகுதியில் நாட்டில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஊடகங்களின் விரிவாக்கத்தை பயன்படுத்தி இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளையும் பிளவுகளையும் ஏற்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் நாட்டில் பல வன்முறைச் சம்பவங்களுக்கு காரணமாக அமைந்தன.
இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை பொருத்தவரையில் சுமார் 1200 வருட கால வரலாறு இருந்து வருகின்றது என்று இந்த நாட்டில் புகழ்பூத்த வரலாற்றாசிரியர்களான பேராசிரியர் கார்ல் குணவர்தன, லெஸ்லி குணவர்தன, பி.வி.ஜே. ஜயசேகர, கே.எம்.டி. சில்வா போன்றோர் அவர்களது இலங்கை வரலாறு பற்றி நூல்கள் மூலம் உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.

அந்தளவு பலமான வரலாற்றை கொண்ட இனமான முஸ்லிம் சமூகத்தின் இருப்பை கேள்விக்குரியாக்கும் வகையில் முஸ்லிம்களது அரசியல், பொருளாதார, மத மற்றும் கலாசார உரிமைகளை மறுக்கும் வகையில் கருத்துக்களை பரப்பி இன முரண்பாடுகளை உருவாக்கி குறுகிய இலாபம் அடைவதற்கான முயற்சிகளால் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பலமான உறவை சீர்குலைக்க பல சந்தர்ப்பங்களில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்திருக்கின்றன.
2010 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட கால சூழ்நிலை வேறாக இருந்தாலும் இன்றை கால சூழ்நிலையில் இலத்திரனியல் ஊடகங்களையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்தி பொய்ப் பிரச்சாரம், வெறுப்பூட்டும் கதைகள் போன்றவற்றை பரப்புவதன் மூலம் முஸ்லிம் சமூகம் தொடர்பாக ஏனைய சமூகங்களுக்கிடையில் சந்தேகத்தையும், அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தவதில் தனிப்பட்ட நலன்களை அடிப்படையாக கொண்டு செயற்படும் ஊடகங்கள் முன்னிலையில் இருந்து செயற்பட்டுள்ளன.
அதனால் 2010 ஆம் ஆண்டிற்கு பிற்பட்ட காலப்பகுதியில் ஊடகங்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் ஒருவிதமான வெறுப்புணர்வு ஏற்பட்ட தோடு அரசாங்கமும் தலையிட்டு சில சந்தர்ப்பத்தில் கட்டுப்பாடுகளையும் சட்டங்களையும் விதிக்கும் நிலைமைகள் ஏற்பட்டன.

தற்காலத்தில் சமூக ஊடகங்களில் தாக்கம் மேலும் வேகமடைந்துள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட பஹன மீடியா இலங்கையில் இலத்திரனியல் வழிமுறை ஊடாக மின் இதழ்களை ஆரம்பித்து முஸ்லிம் சமூகம் தொடர்பாக பரப்பப்படுகின்ற தவறான கதைகள், செய்திகள், வெறுப்பு பேச்சுக்கள் என்பவற்றை மறுத்தும் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் தெளிவையும், விளக்கத்தையும் ஏற்படுத்தி இன, மத, ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவதில் இந்த பஹன மீடியாவின் உருவாக்கமான ஊடக வலையமைப்பான Newsnow என்ற ஊடக செயற்பாடுகள் மிகவும் சிறப்பான பங்களிப்பை செய்து வருகின்றமை பாராட்டத்தக்கதாக இருக்கின்றது.

கடுமையான சவால்களுக்கு மத்தியில் இந்த பஹன மீடியா என்ற நிறுவனம் அதன் ஊடக பணிகளை முன்னெடுத்து வருவதோடு மும்மொழிகளிலும் அதன் சேவையை முன்னெடுத்து வருகின்றமை காலத்தின் தேவை கருதிய பணியாகும்.

2025 நவம்பர் 30ஆம் திகதி அதன் ஊடக பயணத்தில் 07 வருட நிறைவை கொண்டாடுவது பாராட்டத்தக்கதாகும்.

இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கென்று தனியான ஒரு சில ஊடகங்கள் இருந்து வந்தாலும் காலப்போக்கில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார நெருக்கடி காரணமாக அவை தாக்குப்பிடிக்க முடியாமல் அஸ்தமனமாகி போய்விட்டன.

இத்தகைய தனித்துவமாக ஊடகங்களின் தேவை அவசியம் உணரப்பட்ட காலப்பகுதியில் முஸ்லிம் சமூகம் பற்றிய யதார்த்தங்களையும் அந்த சமூகம் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளையும் ஆளும் வர்க்கத்திற்கும் சிங்கள பௌத்த சமூகத்திற்கும் எடுத்துச் சொல்ல சுதேச மொழியில் ஊடக தேவை உணரப்பட்ட காலகட்டத்தில் பஹன மீடியா நிறுவனம் அதன் மும் மொழிகளிலுமான Newsnow என்ற ஊடக சேவை மூம் முக்கியமான பங்களிப்பை செய்து வருகின்றது.

இந்த பஹன மீடியா என்ற நிறுவனம் நாட்டில் நெருக்கடியான காலகட்டத்தில் நீண்ட கலந்துரையாடல்களின் பின்னர் அஸ்ஸெய்யித் சாலிம் மௌலானா, அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் ஆகியோரின் சிந்தனையில் உருவானதாகும்.
நாட்டில் இனங்களுக்கிடையில் ஒற்றுமை, புரிந்துணர்வு, சகவாழ்வு, சகிப்புத் தன்மையை ஏற்படுத்தவதில் கடந்த பல வருடங்களாக கடுமையாக உழைத்து வரும் ஒருவரே அஷ்ஷெக் அப்துல் முஜீப் ஆவார்.
பலதரப்பட்டவர்களோடும் மிகவும் நெருக்கமான பிணைப்பை பேணி வருகின்ற அவர் முஸ்லிம் சமூகம் நவீன காலத்தில் ஊடகங்கள் வாயிலாகவும் அண்மைக்காலத்தில் சமூக ஊடகங்களாலும் எதிர் நோக்குகின்ற சவால்களை தகவல் பரிமாற்ற கருத்தின் ஊடாக சமநிலைப்படுத்தும் வகையில் இந்த இணைய ஊடக செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்தார் எனலாம்.
அந்த வகையில் பஹன ஊடக நிறுவனத்தில் வெளியீட்டகம் இலங்கை அரசாங்கத்தின் ஊடக சட்ட திட்டங்கள் வழிகாட்டல்களை பின்பற்றியதாக நாட்டின் இறைமை தன்னாதிக்கம் என்பவற்றை மதித்து செயற்பட்டு வருவதோடு சிங்கள மொழி மூலம், இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகளில் சிங்கள பௌத்த சமூகத்திற்கு ஏற்படுகின்ற சந்தேகங்கள், தெளிவின்மைகளை போக்க சிங்கள மொழி மூலம் நூல்களை வெளியிடுவதன் மூலம் ஊடக செயற்பாட்டிற்கு அடுத்த கட்டமாக பங்களிப்பை செய்து வருகின்றமையும் முக்கியமான பணியாகும்.
இதுவரையில் அவ்வாறான 5 நூல்களை சிங்கள மொழியில் வெளியிட்டு இந்த நாட்டில் வாழும் சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் இஸ்லாத்தை பற்றிய புரிந்துணைவை ஏற்படுத்தி சந்தேகங்களை போக்க நடவடிக்கைகளை எடுத்து வந்திருக்கின்றது.
அத்துடன் நாட்டில் இளம் சந்ததியினர் மத்தியில் ஊடக அறிவை மேம்படுத்தி நெறிப்படுத்தும் நோக்கில் ஊடக வழிகாட்டலை செய்யவும் இந்த நிறுவனம் மூலம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமையும் பாராட்டத்தக்கதாகும்.
எதிர்காலத்தில் இந்த ஊடக நிறுவனத்தின் சேவை காலத்தின் தேவைக்கு ஏற்ப முஸ்லிம் சமூகம் அதன் இறுப்பை பாதுக்காத்துக் கொள்ள எடுக்கின்ற முயற்சிகளில் முகம் கொடுத்து வருகின்ற சவால்களை எதிர்கொள்ளும் வகையில் நவீன மயப்படுத்தல்களுக்கு உட்பட்டு மேலும் விரிவுபடுத்தல்களை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.
