சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெறவுள்ள ‘6 வது ஆசிய உள்ளக மற்றும் தற்காப்புக் கலை விளையாட்டுப் போட்டிகளில்’ (Asian Indoor and Martial Arts Games) இலங்கை சார்பாகப் பங்கேற்பதற்கானத் தகுதியை கம்பஹா மாவட்டம் கஹட்டோவிட்டவைச் சேர்ந்த 17 வயதான ஃபஹத் நவாஸ் பெற்றுள்ளார்.
இப்போட்டிக்காக நடத்தப்பட்ட தேசிய அளவிலான கடுமையான தெரிவுப் போட்டிகளில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய இவர், ‘வென்குவிஷ் முஆய் தாய்’ (Vanquish Muay Thai) கழகத்தின் அமான் மற்றும் ‘ஷ்யாம் முஆய் தாய்’ (Shyam Muay Thai) கழகத்தின் ஆஷிக் நஸீர் ஆகியோரைத் தோற்கடித்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
இதில் ஃபஹத் நவாஸினால் வீழ்த்தப்பட்ட மினுவாங்கொடையைச் சேர்ந்த ஆஷிக் நஸீர், ஏற்கனவே தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. திறமைமிக்க வீரரான அவரையும் வீழ்த்தியே கஹட்டோவிட்ட UMC கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஃபஹத் நவாஸ் இந்த வாய்ப்பைக் கைப்பற்றியுள்ளார்.
தனது 17 ஆவது வயதிலேயே இத்தகைய மாபெரும் சாதனையை படைத்துள்ள ஃபஹத் நவாஸின் இந்த வெற்றிக்கு, அவரது ஓயாத உழைப்பு, சுயகட்டுப்பாடு, விளையாட்டு மீதான அர்ப்பணிப்பு மற்றும் பயிற்சியாளர் முஆத் இப்திகாரின் தொலைநோக்கு பார்வை கொண்ட பயிற்சிகளுமே பிரதான காரணங்களாக அமைந்துள்ளன.
ஆசிய அளவில் இலங்கையின் கொடியை உயர்த்தப் பயணிக்கும் இளம் வீரர் ஃபஹத் நவாஸ் மற்றும் பயிற்சியாளர் முஆத் இப்திகார் ஆகியோருக்கு UMC நிர்வாகம், விளையாட்டு ரசிகர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
