2030-க்குள் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகளையும் 8 பில்லியன் டொலர் வருமானத்தையும் இலக்காகக் கொண்டுள்ளது அரசாங்கம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய

Date:

இலங்கை சுற்றுலாத்துறையை மேலும் விரிவுபடுத்தி, அதன் பொருளாதார நன்மைகளை உள்ளூர் மக்களுக்கு சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், 2030 ஆம் ஆண்டிற்குள் ஆண்டிற்கு 40 லட்சம் சுற்றுலாப் பயணிகளின் வருகையையும், 8 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தையும் அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

2026 உலக சுற்றுலாத் தினத்தைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய பிரதமர், 2024 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை சுற்றுலாத்துறையில் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

சுமார் 20.5 லட்சம் (2.05 மில்லியன்) சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்ததுடன், 3.17 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை 2,362,521 ஆக அதிகரித்ததுடன், நாட்டின் அந்நியச் செலாவணி வருவாய் 3.22 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்தது.

இந்த வளர்ச்சியின் தொடர்ச்சியாகவே 2030 ஆம் ஆண்டிற்குள் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகளையும், 8 பில்லியன் டொலர் வருமானத்தையும் ஈட்ட அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

சுற்றாடல் அல்லது இலங்கையின் கலாச்சாரப் பாரம்பரியத்திற்கு சேதம் விளைவிக்காமல், உள்ளூர் சமூகங்களை வலுப்படுத்தும் சுற்றாடல் நட்பு முறையிலான சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்று பிரதமர் கூறினார்.

சுற்றுலா மூலம் கிடைக்கும் பொருளாதார நன்மைகள் கிராமங்களில் இயங்கும் சிறு அளவிலான தொழில்முனைவோர் உட்பட அனைவருக்கும் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

2026 உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு மேல் மாகாண சுற்றுலா சபை மற்றும் களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் முதுகலை பட்டப்படிப்பு நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த “நிலையான மற்றும் கலாச்சார ஒருங்கிணைந்த சுற்றுலாவுக்கான டிஜிட்டல் கண்டுபிடிப்பு” பற்றிய தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (27) மேல் மாகாண சபை மண்டபத்தில் நடைபெற்ற இம்மாநாடு, “சுற்றுலாவை மறுவடிவமைப்பு செய்வதற்கான டிஜிட்டல் நிகழ்ச்சி நிரல் மற்றும் செயற்கை நுண்ணறிவு” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது.

மாநாட்டில் மேலும் உரையாற்றிய பிரதமர், “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தின் கீழ், அனைத்துத் துறைகளிலும் நவீன தொழில்நுட்பம் மற்றும் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி பொருளாதாரத்தைப் பலப்படுத்துவது முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்றார். பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் அறிவை சுற்றுலாத்துறையின் நடைமுறை வளர்ச்சிக்கு நேரடியாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் சுற்றுலாத்துறைக்கு அதிக கவனம் செலுத்தப்படும் என்றும், எதிர்கால தொழில் துறையாக சுற்றுலாத்துறையைக் கருதுமாறு பாடசாலை மாணவர்களை அவர் ஊக்குவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சவூதி நீதிமன்றின் தீர்மானத்தை வரவேற்ற ஜனாதிபதி!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவுக்கு எதிரான மரண...

இலங்கையில் ஆண்டுதோறும் அதிகரிக்கும் HIV தொற்றாளர்கள்!

இலங்கையில் HIV தொற்றாளர்கள் மற்றும் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்களின் எண்ணிக்கை...

சிறை விதிகளில் திருத்தம்; இடைக்கால அறிக்கை கையளிப்பு!

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் நடைமுறையில் உள்ள சட்ட விதிகள் மற்றும்...

மெல்போர்னில் கலாநிதி யாசிர் காதியின் “நடுநிலையான சமூகம்” இஸ்லாமிய மாநாடு வெற்றிகரமாக நிறைவு!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், பிரபல இஸ்லாமிய அறிஞர் ஷேக் கலாநிதி யாசிர்...