உலகப் புகழ்பெற்ற பிட்சா ஹட் (Pizza Hut) உணவகச் சங்கிலித் தொடரை அதன் தாய் நிறுவனமான ‘யம்! பிராண்ட்ஸ்’ (Yum! Brands) 2.7 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நெருக்கடி மிகுந்த சந்தைப் போட்டி மற்றும் காலாவதியான உணவகக் கட்டமைப்பு ஆகியவற்றால் பிட்சா ஹட் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வந்த நிலையில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்காவில் உள்ள தனது 250 உணவகங்களை மூடப்போவதாக கடந்த பிப்ரவரி மாதம் இந்நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
யுனைடெட் கிங்டமின் ‘தி கார்டியன்’ (The Guardian) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த விற்பனை இரண்டு பிரிவுகளாக நடைபெறுகிறது.
தனியார் ஈக்விட்டி நிறுவனமான இது, சீனாவின் மெயின்லேண்ட் (Mainland China) வணிகத்தைத் தவிர்த்து, உலகின் பிற பகுதிகளில் உள்ள பிட்சா ஹட் வணிகத்தை சுமார் 1.5 பில்லியன் டாலருக்கு வாங்குகிறது.
சீனாவின் மெயின்லேண்ட் பகுதியில் உள்ள பிட்சா ஹட் வணிகத்தை இந்த நிறுவனம் சுமார் 1.2 பில்லியன் டாலருக்கு வாங்குகிறது.
“உணவகத் துறையில் ஆழமான நிபுணத்துவம் கொண்ட லாங்ரேஞ்ச் மற்றும் யம் சீனா நிறுவனங்களின் கீழ், பிட்சா ஹட் இனிவரும் காலங்களில் எதிர்கால வளர்ச்சியை நோக்கிச் சிறப்பாகச் பயணிக்கும்,” என்று யம்! பிராண்ட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கிறிஸ் டர்னர் தெரிவித்துள்ளார்.
பிட்சா ஹட் நிறுவனம் 1958-ஆம் ஆண்டு அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள விசிட்டாவில் (Wichita) தொடங்கப்பட்டது. 1977-ல் இதனை பெப்சிகோ (PepsiCo) வாங்கியது. பின்னர், 1997-ல் பெப்சிகோ தனது உணவகப் பிரிவை தனியாகப் பிரித்தபோது ‘யம்! பிராண்ட்ஸ்’ உருவானது.
கேஎஃப்சி (KFC) மற்றும் டகோ பெல் (Taco Bell) போன்ற பலமான பிராண்டுகளைக் கொண்டுள்ள யம்! பிராண்ட்ஸ் நிறுவனத்திற்கு, பிட்சா ஹட் நீண்டகாலமாகவே ஒரு பலவீனமான அங்கமாக இருந்து வந்துள்ளது.
“பிராண்டை புதுப்பிக்கவும், நஷ்டத்தில் இயங்கும் கடைகளை மூடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பிட்சா ஹட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வர அதிக முதலீடும் பொறுமையும் தேவைப்படுகிறது. அதற்கு யம்! பிராண்ட்ஸ் தயாராக இல்லை” என குளோபல்டேட்டா (GlobalData) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நீல் சாண்டர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விற்பனை மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு, அதிக லாபம் தரும் தனது மற்ற பிராண்டுகளான KFC மற்றும் டேகோ பெல் மீது கவனம் செலுத்த யம்! பிராண்ட்ஸ் திட்டமிட்டுள்ளது.
கென்டக்கியின் லூயிஸ்வில்லை தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனத்தின் இந்த இரண்டு முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களும் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (Third Quarter) முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
