சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள அனோஜன் சிவராசாவை குறித்த தண்டனையிலிருந்து விடுவிக்கச் செய்யும் முயற்சிகளை ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா மற்றும் உபுல் குமாரப்பெரும ஆகியோர் முன்னெடுத்துள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சின் நேரடி தலையீட்டின் கீழ் இடம்பெறும் இந்த இராஜதந்திர நடவடிக்கைளுக்கு குறித்த இருவரும் தமது சொந்தப் பணத்தை செலவு செய்து வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
சவூதி அரசிடமிருந்து அனோஜனுக்கு மன்னிப்பு பெறும் இந்த தூதுப் பணிக்கென குறித்த இருவரையும் சிறப்பு இராஜதந்திர தூதுவர்களாக சவூதி அரேபியாவுக்கு அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த விடயத்தை நேற்றைய தினம் சபை அமர்வின் போது தெரிவித்திருந்தார்.
இதேவேளை குறித்த தூதுப் பணியின் முதற்கட்டமாக பைசர் முஸ்தபா மற்றும் உபுல் குமாரப்பெரும ஆகியோர் இலங்கையின் நீண்டகால நண்பரும் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியுமான முகமது நஷீட் அவர்களை நேற்றைய தினம் மாலைதீவில் சந்தித்து கலந்துரையாடினர்.
அனோஜனை மரண தண்டனையிலிருந்து மீட்பதற்கு மனிதாபிமான முறையில் உதவிகளை செய்யத் தயார் என இதன்போது மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
