இலங்கை மற்றும் கத்தார் நாடுகளுக்கு இடையிலான கூட்டுத் தொழிலாளர் குழுவின் அண்மைய கூட்டம் தோஹாவில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான தொழிலாளர் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், ஆட்சேர்ப்பு நடைமுறைகளை முறைப்படுத்துதல், வெளிப்படையான மற்றும் தர்மநெறி சார்ந்த பணியமர்த்தலை உறுதிசெய்தல் மற்றும் இலங்கைத் தொழிலாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகிய முக்கிய அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கு கத்தார் தொழிலாளர் அமைச்சகத்தின் துணையமைச்சர் ஷேகா நஜ்வா பின்ட் அப்துல்ரஹ்மான் அல் தானி மற்றும் இலங்கையின் வெளி விவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ஆகியோர் இணைத் தலைமை வகித்தனர்.
பயிற்சி பெற்ற மற்றும் தொழில்முறைத் தகுதிவாய்ந்த இலங்கைத் தொழிலாளர்களுக்கு கதாரில் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து இக்கூட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையே தொழில்முறைத் தகுதிகளை பரஸ்பரம் அங்கீகரிப்பது மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
கத்தாரில் இலங்கைத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன், கூட்டுத் தொழிலாளர் குழுவின் மூலம் நிலையான மற்றும் பயனுள்ள முன்னோக்கிச் செல்லும் செயல்பாட்டைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை இரு தரப்பும் வலியுறுத்தின.
இலங்கைத் தூதுக்குழுவில் கதாரிற்கான இலங்கைத் தூதுவர் சித்தாரா கான், வெளி விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் மேலதிக செயலாளர் சுகத் யாலேமகம மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.எஸ்.டி. குணசிங்க ஆகியோர் பங்கேற்றனர்.
இலங்கை மற்றும் கத்தார் நாடுகளுக்கு இடையிலான 50 ஆண்டு கால இராஜதந்திர உறவைக் குறிக்கும் வகையில் அமைந்த இக்கூட்டம், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை நடைமுறை முடிவுகளாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வேலைவாய்ப்புகள் விரிவாக்கம், திறன் மேம்பாடு, நியாயமான ஆட்சேர்ப்பு முறைகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான வலுவான பாதுகாப்பு என்பன உறுதியாகும்.
