இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்றும், இதனால் ஏற்படக்கூடிய வெள்ள அபாய சூழ்நிலைகளை எதிர்கொள்ள அதிகாரிகள் முன்கூட்டியே தயாராக வேண்டியிருக்கலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் ஏற்படக்கூடிய அதிக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் குறைந்த அழுத்த மண்டலங்கள் காரணமாக, ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இக்காலப்பகுதியிலேயே நாட்டில் வெள்ளப் பெருக்கு நிலைமைகள் ஏற்படுகின்றன.
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு ஈரப்பதனுடனான வானிலை அதிகரித்து காணப்படும்.
இதுவரை வறண்ட வானிலை நிலவிய பகுதிகளில், செப்டம்பர் 28-29 ஆம் திகதிக்குப் பிறகு மற்றும் ஒக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து பிற்பகல் நேரங்களில் இடியுடன் கூடிய மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
சில கடற்பகுதிகளில் கடல் அலைகள் சீற்றமாக இருக்கும் என்பதுடன், அலைகளின் உயரம் 2 முதல் 3 மீற்றர் வரை உயரக்கூடும். இதனால் கடலோர சமூகங்கள், மீனவர்கள் மற்றும் கடற்படையினர் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
