நாட்டில் நிலவும் பலத்த மழைவீழ்ச்சி காரணமாக இதுவரை சுமார் 35 சிறிய அளவிலான நிலச்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
இன்றைய (21) ‘BIG FOCUS’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி இமாயா ஆரியரத்ன, இதுவரை பதிவான சம்பவங்கள் சிறிய அளவிலானவை என்றபோதிலும், தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக அவை தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மூன்று நாட்களில் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி 300 மில்லிமீற்றரைத் தாண்டியுள்ளது. இம்மழை தொடர்ந்து நீடிக்குமாயின் நிலச்சரிவு, கற்பாறைகள் உருண்டு விழுதல், நிலம் தாழிறங்குதல் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுதல் போன்ற ஆபத்துகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது மண்சரிவு அபாயம் கொண்ட 14 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 6 மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. மழை தீவிரமடைந்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் பகுதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
