புத்தளம் தள வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராகப் (Medical Superintendent) பொறுப்பேற்றுள்ள வைத்தியர் லசித்த மழலசேகர (Dr. Lasitha Malalasekara) அவர்களை வரவேற்கும் நிகழ்வும், கடந்த ஒரு வருட காலமாகப் பதில் வைத்திய அத்தியட்சகராகச் சிறப்பாகக் கடமையாற்றி விடைபெறும் வைத்தியர் லசந்த லியனகே (Dr. Lasantha Liyanage) அவர்களுக்கான கௌரவப் பிரியாவிடை நிகழ்வும் செப்டம்பர் 01 (செவ்வாய்க்கிழமை) புத்தளத்தில் உள்ள ‘ICE Talk Family Restaurant’ மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.
வைத்தியசாலை அபிவிருத்திக் குழு (HDC), புத்தளம் மொகிதீன் ஜூம்மா பெரிய பள்ளிவாசல், ஜம்இய்யதுல் உலமா புத்தளம் கிளை, புத்தளம் வர்த்தக சங்கம் (PUTWA) மற்றும் புத்தளம் நகர சபை (MCC) ஆகியவை இணைந்து இந்தச் சிறப்பு நிகழ்வை நடத்தின.
இந்நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள், உலமாக்கள், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் M. J. M. பைசல், புத்தளம் மாநகர சபை மேயர் ரின்சாத் அஹமத், பிரதி மேயர் எம்.என்.எம் நுஸ்கி, புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், புத்தளம் வர்த்தக சங்கத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், வைத்தியர்கள், வைத்தியசாலை அபிவிருத்தியுடன் தொடர்புடைய ஊர்ப் பிரமுகர்கள், அதிபர்கள் எனப் பல தரப்பினரும் இதில் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் வரவேற்புரையை புத்தளம் பெரிய பள்ளிவாசலின் செயலாளர் அஷ்ஷேஹ் S.A.M. பர்ராஜ் ஆங்கிலத்தில் நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து, வைத்தியர் H. M. ஹன்னான் மற்றும் உடற்கூற்றியல் நிபுணர் வைத்தியர் ரகித்த வெலகெதர ஆகியோர் புத்தளம் வைத்தியசாலையின் அபிவிருத்தி மற்றும் எதிர்கால மேம்பாடுகள் குறித்து விசேட உரையாற்றினர்.
புத்தளம் மக்கள் மற்றும் அமைப்புகளின் சார்பில், விடைபெறும் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் லசந்த லியனகே அவர்களுக்கும், புதிய வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் லசித்த மழலசேகர அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


