வேளாண் தொழில்நுட்பம் (Agri-technology), காலநிலைக்கேற்ற விவசாயம் மற்றும் நிலையான உணவு உற்பத்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதுடன், முதலீடுகள் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றங்களை அதிகரிப்பது குறித்து இலங்கையும் கட்டாரும் தீவிர கவனம் செலுத்தியுள்ளன.
வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர கட்டாருக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ விஜயத்தின் போது இக்கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இந்த விஜயத்தின் போது, பாலைவனச் சூழல் சவால்களுக்கு மத்தியில் தொழில்நுட்ப அடிப்படையிலான விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ‘ஆர்கிரிகோ’ (Argrico) நிறுவனத்திற்கு அவர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.
கடுமையான வெப்பம், நன்னீர் தட்டுப்பாடு மற்றும் விவசாய நிலப் பற்றாக்குறை போன்ற தீவிர சவால்களுக்கு மத்தியிலும் நவீன தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி விவசாய உற்பத்தி எவ்வாறு முன்னெடுக்கப்படுகிறது என்பதை பிரதி அமைச்சர் இதன் போது பார்வையிட்டார்.
ஹைட்ரோபோனிக்ஸ் (Hydroponics), செங்குத்து விவசாயம் (Vertical Farming), காய்கறிச் செய்கை, மீன் வளர்ப்பு (Aquaculture), காளான் உற்பத்தி மற்றும் சதுப்புநிலச் செய்கை உள்ளிட்ட பல நவீன விவசாய முறைகள் இத்தொழிற்சாலையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
குறைந்த நிலம் மற்றும் நீர் வளங்களை திறம்படப் பயன்படுத்தி, ஆண்டு முழுவதும் உற்பத்தியை உறுதி செய்வதன் மூலம் உணவுப் பாதுகாப்பிற்குப் பங்களிக்கும் வகையில் இந்த நவீன முறைமைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ‘Argrico’ நிறுவனத்தின் பயிர்ச்செய்கை அமைப்புகளில் இலங்கையிலிருந்து பெறப்படும் ‘தென்னை நார் எச்சங்கள்’ (Coco Peat) பயன்படுத்தப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய அருண் ஹேமச்சந்திர, இது இலங்கையின் விவசாய விளைபொருட்களுக்கும் கட்டாரின் விரிவடைந்து வரும் வேளாண் தொழில்நுட்பத் துறைக்கும் இடையிலான ஏற்கனவே உள்ள ஒரு வலுவான பிணைப்பு என்றும் குறிப்பிட்டார்.
கட்டுப்படுத்தப்பட்ட சூழல் விவசாயம், திறம்பட நீர் மற்றும் நிலப் பயன்பாடு, அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம், குளிர்சாதனப் சேமிப்புக் கிடங்கு மேலாண்மை (Cold-chain management) மற்றும் விநியோகச் சங்கிலி அமைப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவை குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
ஏற்கனவே இலங்கையில் முதலீடு செய்துள்ள ‘Argrico’ நிறுவனம், கூடுதல் அந்நிய நேரடி முதலீடுகள், தொழில்நுட்பப் பரிமாற்றம், ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பகிர்வு மூலம் இலங்கையுடனான தனது ஈடுபாட்டை மேலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இச்சந்திப்பில் பேசப்பட்டது.
இலங்கையின் இயற்கை விவசாயச் சாதகங்களை நவீன தொழில்நுட்பம் மற்றும் காலநிலைக்கேற்ற முறைகளுடன் இணைப்பதன் மூலம் நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, ஏற்றுமதி சார்ந்த விவசாயத் துறைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
