“தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் அதீத பயன்பாடு மனிதனின் சுயாதீனத்தையும் சிந்தனையையும் எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து சிரியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற இஸ்லாமிய சிந்தனையாளர், கல்வியாளர்,டாக்டர் அப்துல் கரீம் பக்கார் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள சிந்தனைத் தூண்டும் பதிவை வாசகர்களுக்கு தருகிறோம்
இந்தக் கேள்வி தொழில்நுட்பம் சார்ந்தது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், இது மனிதனைப் பற்றிய ஒரு கேள்வி என்று நான் பார்க்கிறேன்.
முழுமையாக ஒரு வாரம் இணையம் துண்டிக்கப்பட்டால் என்ன நடக்கும்?
நான் நிறுவனங்களைப் பற்றியோ, சந்தைகளைப் பற்றியோ, சமூக ஊடகங்களைப் பற்றியோ கேட்கப் போவதில்லை. நம்மைப் பற்றித்தான் கேட்கப் போகிறேன்.
தன் நேரத்தை என்ன செய்வது என்று தனக்குத் தெரியாது என்பதை எத்தனை பேர் கண்டுபிடிப்பார்கள்?
ஒவ்வொருவரும் தங்கள் திரையில் மூழ்கியிருக்காமல், எத்தனை குடும்பங்கள் முதன்முறையாக ஒரே மேசையைச் சுற்றி அமைதியாக அமரும்?
பல ஆண்டுகளாக அலமாரியிலேயே கிடந்த எத்தனை புத்தகங்கள் திறக்கப்படும்?
வெறும் குறுஞ்செய்தி அனுப்புவதைத் தாண்டி, எத்தனை நண்பர்கள் நேரில் சென்று பார்க்கப்படுவார்கள்?
நாம் ஓய்வாக (வெறுமையாக) உணரும்போதெல்லாம், நமது கைகள் முதலில் நீளுவது தொலைபேசியை நோக்கியே என்றாகிவிட்டது. எந்தளவுக்கு என்றால், அந்த வெறுமை என்பதே நமக்கு அச்சம் தரும் ஒன்றாக மாறிவிட்டது.
அமைதியான தருணங்களில்தான் மனிதன் தன்னைத் தானே ஆழமாகப் புரிந்துகொள்கிறான். உலகின் இரைச்சலிலிருந்து சற்று விலகி இருக்கும்போது மட்டுமே அவனால் தன் சொந்தச் சிந்தனைகளைக் கேட்க முடிகிறது.
நான் தொழில்நுட்பத்தைக் கைவிடச் சொல்லவில்லை; ஏனெனில் அதைச் சரியாகப் பயன்படுத்தினால் அது ஒரு பெரும் வரமாகும். ஆனால் நான் கேட்கிறேன்:
நாம்தான் இதைப் பயன்படுத்துகிறோமா, அல்லது இதுதான் நம்மைப் பயன்படுத்துகிறதா?
நமது சொந்த விருப்பத்தின் பேரில், அதிலிருந்து விலகி முழு ஒரு நாளை நம்மால் கழிக்க முடியுமா? அல்லது நாம் நினைப்பதை விட இது கடினமானதாக மாறிவிட்டதா?
என் பார்வையில், எல்லாமே உங்கள் கைவசம் கிடைப்பது சுதந்திரம் அல்ல. எப்போது வேண்டுமானாலும் எதையும் உங்களால் கைவிட முடிகிறதோ, அதுவே உண்மையான சுதந்திரம்.
ஒரு சில மணிநேரங்கள் கூட ஒரு பொருளை விட்டுவிலக மனிதனால் இயலாவிட்டால், அப் பொருள் அவன் வாழ்க்கையின் ஒரு கருவி மட்டுமல்ல, மாறாக அவனையே கட்டுப்படுத்தும் சக்தியாக (எஜமானனாக) மாறிவிட்டது என்று அர்த்தம்.
அதனால்தான் நம்மில் ஒவ்வொருவருக்கும், அவ்வப்போது, இணைய இணைப்பிலிருந்து சிறிது காலம் விலகி இருத்தல் அவசியம்… தன் ஆன்மாவுடன் தன்னை மீண்டும் இணைத்துக் கொள்வதற்காக.
