Wednesday, November 4, 2026

ஒரு ஆளுமையின் மறைவு: அஷ்ஷெய்க் எம். எச். ஹனஸ் மொஹிதீன் (நளீமி)

3 min read · 4 reads

✍️ கலாநிதி அஷ்ஷெய்க் ஆசாத் சிராஸ்

புத்தளத்தின் மார்க்க, கல்வி மற்றும் சமூகப் பணிகளின் வரலாற்றில் தனக்கென ஒரு தடத்தைப் பதித்த மூத்த உலமா அஷ்ஷெய்க் எம். எச். ஹனஸ் மொஹிதீன் (நளீமி / ரியாதி) அவர்களின் மறைவுச் செய்தி ஆழ்ந்த கவலையையும் பெரும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சில மனிதர்கள் தங்களது வாழ்நாளில் வகித்த பதவிகளால் மாத்திரம் நினைவுகூரப்படுவதில்லை. மாறாக, அவர்கள் சமூகத்திற்காக ஆற்றிய பணிகள், உருவாக்கிய தலைமுறைகள், கல்வித்துறையில் பதித்த தடங்கள், சமூக உறவுகளில் வெளிப்படுத்திய பண்புகள் ஆகியவற்றின் ஊடாகவே வரலாற்றில் நிலைத்து நிற்கின்றார்கள். அந்த வகையில் அஷ்ஷெய்க் ஹனஸ் மொஹிதீன் அவர்கள் புத்தளம் சமூகத்தின் பல்வேறு துறைகளிலும் தடம் பதித்த ஒரு பல்முக ஆளுமையாவார்.

கல்விப் பயணமும் அறிவுப் பங்களிப்பும்

ஜாமிஆ நளீமிய்யாவின் ஆரம்பகால மாணவர் அணியைச் சேர்ந்த அன்னார், இரண்டாம் தொகுதி மாணவராகப் பயின்றவர். ஜாமிஆவின் மாணவர் சுட்டிலக்கம் 53 ஆகும். 1982 மே 9ஆம் திகதி நடைபெற்ற ஜாமிஆ நளீமிய்யாவின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் அஷ்ஷெய்க் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.

தனது மார்க்கக் கல்வியைத் தொடர்ந்து சவூதி அரேபியாவுக்குச் சென்று ரியாத் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியையும் கலைமாணிப் பட்டத்தையும் பெற்றார். நாடு திரும்பிய பின்னர் அரசாங்கப் பாடசாலையில் மௌலவி ஆசிரியராகப் பணியாற்றி, ஆசிரியப் பணியை வெறும் தொழிலாகக் கருதாமல் மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்க வளர்ச்சிக்கான பொறுப்பாகக் கருதி செயல்பட்டார்.

கடயா மோட்டை மற்றும் புத்தளம் மணல்குன்று பாடசாலைகளில் ஆசிரியராகப் பணியாற்றியதுடன், அப்பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.

1990ஆம் ஆண்டு முதல் புத்தளம் அல் மத்ரஸதுல் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் நீண்டகால வருகைதரு விரிவுரையாளராகவும், புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் விரிவுரையாளராகவும் பின்னர் அதன் கல்வி நிர்வாகப் பொறுப்பாளராகவும் சேவையாற்றினார். அல்குர்ஆன், அல்ஹதீஸ் மற்றும் ஃபிக்ஹ் ஆகிய துறைகளில் பள்ளிவாசல்களில் வகுப்புகளை நடத்தி அறிவைப் பரப்புவதிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டார்.

உலமா சபைக்கும் சமூக நிறுவனங்களுக்கும் ஆற்றிய சேவை

அன்னாரின் சமூகப் பங்களிப்புகளில் குறிப்பிடத்தக்கது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்ட மற்றும் நகரக் கிளைகளுக்கான நீண்டகால சேவையாகும். இருபது வருடங்களுக்கும் மேலாக அதன் பொதுச் செயலாளராகப் பணியாற்றி, உலமா சபையின் செயற்பாடுகளையும் சமூகப் பணிகளையும் முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றினார்.

புத்தளம் மாவட்டத்தில் ஜம்இய்யத்துல் உலமாவின் இன்றைய கட்டமைப்பு உருவாவதற்கு முன்னரே, மர்ஹூம் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களின் தலைமையிலான உலமா சபையின் ஊடாக கல்வி, கலாசாரம், பொருளாதாரம், சமூக மற்றும் அரசியல் விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சமூக முன்னேற்றத்திற்காகப் பணியாற்றிய முன்னோடிகளில் ஒருவராக அவர் விளங்கினார்.

மேலும், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஆரம்பகாலம் முதல் தனது இறுதிக்காலம் வரை அங்கத்தவராகவும், புத்தளம் அல் மத்ரஸதுல் இஸ்லாமிய்யாவின் முன்னாள் கௌரவ செயலாளராகவும் தனது பங்களிப்பை வழங்கினார்.

அன்னார் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் செயற்பாடுகளுக்குள் மாத்திரம் தன்னை மட்டுப்படுத்திக்கொள்ளவில்லை. பல்வேறு சமூக அமைப்புகளுடனும் உலமா சமூகத்துடனும் இணைந்து பொதுநலப் பணிகளில் ஈடுபட்டார். முதலாவது றாபிதாவின் ஆலோசனைக் குழுவில் அங்கம் வகித்த ஐவரில் ஒருவராகவும் அவர் இருந்தமை அவரது சமூக மற்றும் அமைப்புசார் அனுபவத்திற்குச் சான்றாகும்.

ஆளுமையும் மனிதநேயப் பண்புகளும்

அன்னாரைப் பற்றி நினைவுகூரும்போது அவரது நிறுவனப் பொறுப்புகளுக்கு அப்பால் அவரது தனிப்பட்ட ஆளுமையும் முக்கியத்துவம் பெறுகின்றது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, மாணவர்கள் முதல் உலமாக்கள் மற்றும் அறிஞர்கள் வரை அனைவரையும் அவரவர் தகுதிக்கும் அந்தஸ்துக்கும் ஏற்ப மதித்து, கண்ணியப்படுத்தும் பண்பு அவரிடம் காணப்பட்டது. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தனது நிலைப்பாட்டைத் தெளிவாகவும் உறுதியாகவும் எடுத்துரைக்கக்கூடியவராக அவர் விளங்கினார்.

ஓய்வுக்காலத்திலும் சுறுசுறுப்பையும் சமூக அக்கறையையும் இழக்காமல் பல்வேறு பொதுப்பணிகளில் ஈடுபட்டு வந்தமை அவரது அர்ப்பணிப்பு உணர்வை எடுத்துக்காட்டுகின்றது.

குடும்பமும் தலைமுறை உருவாக்கமும்

ஒரு மனிதரின் சமூகப் பங்களிப்பைப் போலவே அவரது குடும்ப வாழ்க்கையும் முக்கியமானது. அன்னார் தனது ஆறு பிள்ளைகளையும் ஆலிம்கள், வைத்தியர், பொறியியலாளர் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் வகையில் உருவாக்கியதுடன், அவர்களை சமூகப் பொறுப்புணர்வுள்ளவர்களாகவும் வளர்த்தெடுத்தார். சமூகத்தில் ஒவ்வொரு தளத்திலும் அவர்கள் ஆற்றுகின்ற சேவைகள் நிச்சயமாக அவர்களை பெற்றெடுத்த பெற்றோர்களைச் சாரும்.

அறிவையும் ஒழுக்கத்தையும் மார்க்கப் பற்றையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதில் ஒரு தந்தையாகவும் ஆசிரியராகவும் அவர் ஆற்றிய பங்களிப்பு நினைவுகூரத்தக்கது.

ஒரு தலைமுறையின் சேவைப் பயணத்திற்கு விடை!

ஜாமிஆ நளீமிய்யாவின் ஆரம்பகால மாணவர் என்ற அடையாளத்திலிருந்து உலமா சபையின் நீண்டகால செயலாளர், ஆசிரியர், விரிவுரையாளர், கல்வி நிர்வாகி, சமூக அமைப்புகளின் செயற்பாட்டாளர் எனப் பல்வேறு பரிமாணங்களில் வாழ்ந்து காட்டிய அன்னாரின் மறைவு புத்தளம் சமூகத்திற்கும் உலமா சமூகத்திற்கும் கல்வித்துறைக்கும் இழப்பாகும்.

அவர் விட்டுச் சென்ற கல்விப் பங்களிப்புகளும் சமூகப் பணிகளும் அவர் உருவாக்கிய மாணவர் தலைமுறைகளும் அவரை நீண்டகாலம் நினைவுகூரச் செய்யும்.

ஒரு மனிதரின் வாழ்வு முடிவடையலாம். ஆனால் அவர் ஆற்றிய நற்செயல்களும் உருவாக்கிய நல்ல தலைமுறைகளும் சமூகத்திற்கு வழங்கிய பயன்களும் தொடர்ந்து வாழும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து, அவருடைய நற்செயல்களை ஏற்றுக்கொண்டு, கப்ருடைய வாழ்க்கையை ஒளிமயமானதாகவும் விசாலமானதாகவும் ஆக்கி, ஜன்னத்துல் பிர்தவ்ஸில் உயர்ந்த இடத்தை வழங்குவானாக!

அன்னாரைப் பிரிந்து துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், மாணவர்கள், சக உலமாக்கள், நண்பர்கள் மற்றும் சமூகத்தினர் அனைவருக்கும் அழகிய பொறுமையையும் மன அமைதியையும் வழங்குவானாக!