சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளியான சிவராசா அனோஜனின் தண்டனையைக் குறைப்பது அல்லது அரச மன்னிப்புப் பெறுவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் சிறப்பு முறையீட்டுக் கடிதத்தைச் சமர்ப்பிக்க, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் தலைமையிலான ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்ட தூதுக்குழுவொன்றைச் சவூதி அரேபியாவுக்கு அனுப்ப முன்மொழியப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இத்துடன், அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரின் போது சவூதி வெளியுறவு அமைச்சரைச் சந்தித்து, அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குவது அல்லது தண்டனையைக் குறைப்பது தொடர்பில் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
வழக்கின் சட்ட நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைஸர் முஸ்தஃபா ஆகியோர் தங்களது சொந்தச் செலவில் சவூதி அரேபியாவிற்குப் பயணம் செய்து, அங்குள்ள சட்ட நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து தேவையான சட்டத் தலையீடுகளை மேற்கொள்ளச் சம்மதித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் வெளிப்படுத்தினார்.
அரசாங்கத்தால் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விஜித ஹேரத் மேலும் விளக்குகையில்:
ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் அனோஜனுடன் நேரடித் தொடர்பில் இருப்பதுடன், தூதரக உதவிகளையும் வழங்கி வருகிறது.
இந்த வழக்கின் தற்போதைய மற்றும் எதிர்காலச் சட்டச் செலவுகள் அனைத்தையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்.
அனோஜனின் குடும்பத்தினருக்கு அனைத்து விபரங்களும் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலோ அல்லது அனோஜனை மீட்கும் முயற்சிகளைப் பாதிக்கும் வகையிலோ கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அனைத்துத் தரப்பினரையும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
பதிவு செய்யப்பட்ட புலம்பெயர் தொழிலாளியாக அனோஜன் சவூதி அரேபியாவிற்குச் சென்றார்.
ஃபேஸ்புக் பதிவு ஒன்றைத் தொடர்ந்து வேலையை இழந்த அவர், இஸ்லாத்தையும் சவூதி சட்டத்தையும் அவமதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
இணையவழி குற்றவியல் சட்டத்தின் கீழ் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது.
பின்னர் அவர் தனது தவறை ஒப்புக்கொண்டு ஃபேஸ்புக்கில் வீடியோ மன்னிப்பு கோரினார்.
இலங்கைத் தூதரகத்தின் வழிகாட்டுதலுடன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. சவூதி அரசின் சார்பில் ஷரியா சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டைத் தொடர்ந்து, முஹம்மது நபி நபிகளை அவமதித்த குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.இதன் எழுத்துப்பூர்வ தீர்ப்பு கிடைக்கப்பெற்றதுடன், அபராதம் இடைநிறுத்தப்பட்டு அவரது ஃபேஸ்புக் கணக்கை முடக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
தற்போது சவூதி மற்றும் உள்நாட்டுச் சட்ட நிபுணர்களுடன் இணைந்து இத்தீர்ப்பு மறுபரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், இராஜதந்திர மற்றும் மனிதாபிமான வழிகளில் அவரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பாராளுமன்றத்திற்கு உறுதி அளித்தார்.
