நாடு திரும்பும் வழியில் தனது விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக, இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ரூமேஷ் தரங்க பத்திரகேவுக்கு இழப்பீடு வழங்க துருக்கிய ஏர்லைன்ஸ் (Turkish Airlines) ஒப்புக்கொண்டுள்ளது.
விமானப் போக்குவரத்து அதிகாரிகளுடனான சந்திப்பில், துருக்கிய ஏர்லைன்ஸ் (Turkish Airlines) பிரதிநிதிகள் ஏற்பட்ட சேதத்திற்கு வருத்தம் தெரிவித்ததுடன், இது குறித்து உள்விசாரணை நடத்தவும் ஒப்புக்கொண்டனர்.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் தகவலின்படி, அந்த விமான நிறுவனம் சேதத்தின் அளவை மதிப்பிட்டு, சம்பந்தப்பட்ட விளையாட்டு வீரருக்கு இழப்பீடு வழங்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளது.
இந்த ஆண்டில் தொடர்ச்சியான சிறப்பான வெற்றிகள் மூலம் ஈட்டி எறிதல் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 23 வயதான வளர்ந்து வரும் நட்சத்திரம், தனது ஈட்டிகள் உடைந்திருப்பதைக் கண்டு மிகுந்த மனவேதனை அடைந்தார்.
பதிரகே தனது சேதமடைந்த ஈட்டிகளின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு, தான் அவற்றை எறிந்த தூரங்களையும் பட்டியலிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
