சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கை தொழிலாளியான அனோஜன் சிவராசாவிற்கு அரச பொதுமன்னிப்பு (Royal Clemency) வழங்கி அவரது உயிரைக் காப்பாற்றுமாறு தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக சவூதி அரேபிய அரசிடம் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செப்டம்பர் 24 ஆம் திகதியிடப்பட்டு, சவூதி வெளிவிவகார அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில், அனோஜனை தண்டனையிலிருந்து விடுவித்து, அவரது உயிரைக் காப்பாற்ற அவசர மற்றும் கருணை அடிப்படையிலான உதவிகளை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அனோஜனுக்கு ஆரம்பத்தில் விதிக்கப்பட்டிருந்த 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் என்பன, உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளைத் தொடர்ந்து மரண தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தமக்கு தெரியவந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அண்மைக்கால அறிக்கைகளும் இவரது ஆரம்பகால சிறைத்தண்டனை பின்னர் மரண தண்டனையாக மாற்றப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளன.
குறிப்பிட்ட வழக்குடன் தொடர்புடைய ஃபேஸ்புக் (Facebook) கருத்தை அனோஜன் உடனடியாக நீக்கியதுடன், அதற்காக மன்னிப்பும் கோரியிருந்ததாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இஸ்லாம் மார்க்கத்தை அவமதிக்கும் நோக்கமோ அல்லது புண்படுத்தும் நோக்கமோ அவருக்கு இருக்கவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேவேளை, குற்றத்தின் தன்மை, எடுக்கப்பட்ட சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் அனோஜனின் தற்போதைய நிலைமை உள்ளிட்ட உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை நாடாளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சகிப்புத்தன்மை மற்றும் மனிதநேயப் பண்புகளை கருத்தில் கொண்டு, இந்த வழக்கை கருணை அடிப்படையில் பரிசீலித்து அனோஜனுக்கு அரச பொதுமன்னிப்பு வழங்குமாறு சவூதி அரசாங்கத்திடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தற்போது அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் இருதரப்பும் அனோஜனுக்கான பொதுமன்னிப்பைப் பெற இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையிலேயே இந்தக் கூட்டுப் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
