சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கைத் தொழிலாளியான சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை, எதிர்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இச்சந்திப்பில் அனோஜனின் தந்தையான தம்பிராசா சிவராசா, தாயாரான இராசமாணிக்கம் யோகாலக்ஷ்மி மற்றும் சகோதரர் சிவராசா ஹம்சினன் ஆகியோர் கலந்துகொண்டு, அனோஜனை விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்துக் கலந்துரையாடினர்.
கலந்துரையாடலின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உடனடியாக இலங்கையிலுள்ள சவூதி அரேபியத் தூதுவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு அனோஜனின் தற்போதைய நிலைமை குறித்தும், அவரை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, சவூதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனோஜனுடன் தொலைபேசியில் உரையாடிய சஜித் பிரேமதாச, அவரது நலம் விசாரித்ததுடன் ஆறுதலும் கூறினார். மேலும், இலங்கை வெளியுறவு அமைச்சச்சின் செயலாளருடனும் தொலைபேசியில் பேசி, அனோஜனை விடுவிக்க அரசாங்கம் எடுத்து வரும் தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.
இன, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை பாதுகாப்பாக மீட்டுவர சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக அவரது குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உறுதியளித்தார்.
முன்னதாக, சவூதி அதிகாரிகளுடன் தூதரக வழிகளில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்திருந்த போதிலும், அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அமைச்சு இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
