சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனையையும் அபராதத்தையும் எதிர்கொண்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் என்பவருக்கு அரச மன்னிப்பு வழங்கக் கோரி, இலங்கையின் பல்வேறு அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூதிடம் அவசர மனிதநேயக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாராளுமன்ற பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலிக் உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் 2026 செப்டம்பர் 21ஆம் திகதியிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையைக் குறைத்தல், ரத்து செய்தல் அல்லது அபராதத்தை ரத்து செய்தல் போன்ற நிவாரணங்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் ஈட்டும் தொழிலாளியான அனோஜனின் வருமானத்திலேயே இலங்கையிலுள்ள அவரது குடும்பம் பெரிதும் தங்கியுள்ள நிலையில், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை அவரது பொருளாதார சக்திக்கு அப்பாற்பட்டது என்பதை எம்.பி.க்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தான் குற்றவாளியாகக் காணப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு அனோஜன் தனது தவறை உணர்ந்து மிகுந்த மனவருத்தத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் என்றும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் முஸ்லிம்களின் மத உணர்வுகள் மீதும் கொண்ட மரியாதையை வெளிப்படுத்தி மன்னிப்புக் கோரியுள்ளார் என்றும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் சட்ட அதிகாரம், இறையாண்மை மற்றும் நீதித்துறை நிறுவனங்களுக்குத் தங்களது முழு மரியாதையை வெளிப்படுத்தும் அதேவேளையில், இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகள் மற்றும் நல்லெண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு, முற்றிலும் மனிதநேய அடிப்படையில் இக்கோரிக்கையை முன்வைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
