இலங்கைக்கு வடகிழக்கே வடமேற்கு வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது இலங்கையிலிருந்து வடகிழக்கே சுமார் 1,000 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளதுடன், மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து இந்தியாவின் ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்பகுதியைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இலங்கைக்கு நேரடிப் பாதிப்பு இல்லை என்றாலும், நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சில இடங்களில் 100 மி.மீ-க்கும் அதிகமான பலத்த மழை பதிவாகலாம். இதேவேளை வடமத்திய மாகாணம் & மன்னார்: பல முறை மழை பெய்யக்கூடும் என குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, அம்பாந்தோட்டை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 40 – 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
வங்காள விரிகுடாவில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்பதால் கடல் பகுதி மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
வட அகலரேகை 7 – 22 மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 83 – 95 ஆகிய எல்லைக்குட்பட்ட கடல் பகுதிக்கு மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளுக்காகச் செல்வதை முழுமையாகத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே அப்பகுதியில் உள்ள மீனவர்கள் உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காங்கேசன்துறை முதல் புத்தளம், கொழும்பு, காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
திருகோணமலை முதல் காங்கேசன்துறை, மன்னார் ஊடாக சிலாபம் வரையிலும், காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 – 60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
புத்தளம் முதல் கொழும்பு, காலி, மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீட்டர் வரை உயரக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் தற்காலிகமாகப் பலத்த காற்றும், கடல் கொந்தளிப்பும் ஏற்படக்கூடும் என்பதால், மின்னல் அபாயங்கள் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் அசம்பாவிதங்களைக் குறைக்க மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
