நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு உகந்த வளிமண்டலச் சூழல் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்துடன், சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி நிலவக் கூடும்.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புத்தளம் முதல் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். முல்லைத்தீவு முதல் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
காற்று நிருதி திசையிலிருந்து மணிக்கு 20 – 30 கி.மீ வேகத்தில் வீசும். எனினும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கி.மீ வரை அதிகரிக்கும்.
மேற்குறிப்பிட்ட கடற்பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். இடியுடன் கூடிய மழையின்போது இக் கடற்பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும் என்பதால் மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
