பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் வரைவுச் சட்டமூலம்’ உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கே – முன்னிலை சோசலிசக் கட்சி சாடல்!

Date:

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ளபயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் Protection of the State from Terrorism Bill), தொழிற்சங்க நடவடிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மக்களின் அரசியல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கே பயன்படும் என முன்னிலை சோசலிசக் கட்சி (FSP)  கண்டனம் தெரிவித்துள்ளது.

நுகேகொடையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட, கடந்த செப்டம்பர் 22ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இந்தச் சட்டமூலம், பயங்கரவாதத்திலிருந்து அரசைக் காப்பது என்ற பெயரில் அரசாங்கத்தின் அதிகாரங்களை பெருமளவில் விரிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

“இதன் பெயர் பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பது என்று கூறினாலும், இதன் உண்மையான நோக்கம் மக்களின் அரசியல் போராட்டங்களில் இருந்து அரசினைப் பாதுகாப்பதே ஆகும்” என ஜயகொட குறிப்பிட்டார்.

இந்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாதம் குறித்த வரைவிலக்கணம், ஆயுதமேந்திய வன்முறைகளுக்கு அப்பாற்பட்டு மிகவும் விரிவாக வரையறுக்கப்பட்டுள்ளது என அவர் வாதிட்டார். அரசாங்கம் அல்லது சர்வதேச அமைப்பு ஒன்றை ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்பட வைக்க அல்லது செயல்பட விடாமல் தடுக்க மேற்கொள்ளப்படும் அரசியல் மற்றும் சித்தாந்த ரீதியிலான போராட்டங்கள் கூட இந்தச் சட்டத்தின் கீழ் வரக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.

“அதாவது, சம்பள உயர்வை கோரிப் போராடுபவர்கள் அல்லது இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கூடாது என்று கூறுபவர்கள் கூட பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்படக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது” என்று அவர் எச்சரித்தார்.

இச்சட்டமூலத்தின் இலக்கு வன்முறையாளர்கள் அல்லர்; தொழிற்சங்கத் தலைவர்கள், விவசாயச் சங்கத் தலைவர்கள், மாணவர் தலைவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூகத் தலைவர்களே இதன் முக்கிய இலக்குகளாக இருப்பார்கள் என்றும் FSP அஞ்சுகிறது.

மேலும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஒரே நேரத்தில் இரண்டு மாத காலத்திற்குத் தடுத்து வைக்கும் உத்தரவை (Detention Orders) பிறப்பிக்க இச்சட்டம் அதிகாரம் அளிப்பதாகவும், இதன் மூலம் நீதிமன்ற உத்தரவு இன்றியே ஒருவரை ஒரு வருடம் வரை தடுத்து வைக்க முடியும் என்றும் அவர் கவலை வெளியிட்டார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிகள், வேலைவாய்ப்பு, சம்பளம் மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராக எழக்கூடிய மக்கள் போராட்டங்களை எதிர்கொள்ளவே அரசாங்கம் இந்த அடக்குமுறைச் சட்டத்தைக் கூர்மைப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்ட புபுது ஜயகொட, “இந்தச் சட்டமூலம் குறித்து தொடர்ந்து பேசிப் பயனில்லை, நாம் வீதியில் இறங்கி போராடி இதனைத் தோற்கடிக்க வேண்டும்” என அழைப்பு விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அடுத்து வரும் 36 மணித்தியாலங்களுக்கு மழை நீடிக்கும் வாய்ப்பு!

அடுத்து வரும் 36 மணித்தியாலங்களில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி,...

வேளாண் தொழில் நுட்பம் மற்றும் நிலையான உணவு உற்பத்தியில் இலங்கை – கட்டார் கூட்டுறவு விரிவாக்கம்

வேளாண் தொழில்நுட்பம் (Agri-technology), காலநிலைக்கேற்ற விவசாயம் மற்றும் நிலையான உணவு உற்பத்தி...

சவூதி மன்னரிடம் அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குமாறு இலங்கை முஸ்லிம் எம்.பிக்கள் கூட்டு வேண்டுகோள்.

சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனையையும் அபராதத்தையும் எதிர்கொண்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் என்பவருக்கு...

27ஆவது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று ஆரம்பமாகிறது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டுக் மண்டபத்தில் 27ஆவது கொழும்பு சர்வதேச புத்தகக்...