இலங்கை வக்ப் சபை மற்றும் முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து, அக்குறணை மஸ்ஜித் சம்மேளனம் மற்றும் அக்குறணை அஸ்னா ஜும்மா மஸ்ஜித் ஆகியவற்றின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்த “தேசிய மஸ்ஜித் நம்பிக்கையாளர்கள் வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டம்” (National Masjid Trustee Guidance Program) நேற்று (2026 செப்டம்பர் 20) அக்குறணை அஸ்னா ஜும்மா பள்ளிவாசலில் வெற்றிகரமாக நடைபெற்றது.
மஸ்ஜித் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும், பள்ளிவாசல்களை பொதுமக்களுக்கு உகந்த, நல்வழிகாட்டும் மையங்களாக மாற்றுவதற்கும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த விசேட செயலமர்வில் , பிரதம அதிதியாக சமய மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் கௌரவ முனீர் முளப்பர் அவர்கள் கலந்துகொண்டார்.
மேலும், விசேட அதிதியாக அக்குறணை மற்றும் பூஜாபிட்டிய பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரியாஸ் பாரூக் அவர்களும் கலந்துகொண்டார்.
பல பிரிவுகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் வக்ப் சபையின் தலைவர் மர்ஷட் பாரி, சட்டத்தரணி எம்.எல்.இஸட். மசூதீன் , சட்டத்தரணி எம்.ஐ. அமீனுதீன், ஏ.எம்.ஜே.எம். ஜவ்பர், எம்.ஏ.எம். அரூஸ் , அஷ்ஷெய்ஃ எம்.எஸ்.எம். இஹ்சான், ரிபாக் அஹமட் ஆகிய வக்ப் சபை உறுப்பினர்களும், முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் அவர்கள் உட்பட திணைக்கள அதிகாரிகளும், அக்குறணை மஸ்ஜித் சம்மேளனத்தின் தலைவர் , அஷ்ஷெய்ஃ ஷியாம் (யூசுபி) அவர்கள் உட்பட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அக்குறணை மற்றும் பூஜாபிட்டிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 110 பள்ளிவாசல்களை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த விசேட செயலமர்வில்,அந்த அனைத்து பள்ளிவாசல்களினதும் நம்பிக்கையாளர் சபைகளைச் சேர்ந்த சுமார் 800 பேர் கலந்துகொண்டனர்.
இதன் போது, வக்ஃப் சட்டத்தின் உள்ளடக்கங்களை உள்ளடக்கிய சுருக்கமான விபரங்கள் அடங்கிய சுவர் சட்டகங்கள் பள்ளிவாசலுக்கு வரும் மக்களின் விழிப்புணர்விற்காக அடையாள ரீதியாக நான்கு மஸ்ஜித் நிர்வாக சபைகளிடம் கையளிக்கப்பட்டு, நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாக நிறைவுற்றது.

