செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்களால் (CSAM) சிறுவர்களுக்கு ஏற்படும் அபாயங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக, சிறுவர்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படும் உண்மையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களே இத்தகைய குற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தன.
இருப்பினும், AI தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியினால், குற்றவாளிகள் இப்போது சிறுவர்களின் சாதாரண புகைப்படங்களை மாற்றி, மிகவும் தத்ரூபமான, ஆபாசமான மற்றும் துஷ்பிரயோக உள்ளடக்கங்களை உருவாக்குகின்றனர் என்று பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். இது சிறுவர்களின் தனியுரிமை, கண்ணியம், மனநலம் மற்றும் உணர்ச்சிப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
சிறுவர்கள் இணையத்தில் அச்சுறுத்தல் அல்லது கையாளுதலுக்கு உள்ளாகிறார்களா என்பதை அறிய பெற்றோர் பின்வரும் அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும்:
-
பெற்றோர் அருகில் வரும்போது திரையை மூடுவது அல்லது மறைப்பது.
-
தனியுரிமை அமைப்புகளைத் (Privacy settings) திடீரென மாற்றுவது அல்லது இரகசியக் கணக்குகளை உருவாக்குவது.
-
குற்ற உணர்ச்சி, பயம் அல்லது தனிமைப்படுதல் போன்ற மன உளைச்சலுக்கான அறிகுறிகள்.
-
இணையவழி உரையாடல்கள் குறித்த வழக்கத்திற்கு மாறான இரகசியத்தன்மை.
சிறுவர்களைப் பாதுகாக்கக் குடும்பங்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸார் வலியுறுத்துகின்றனர்:
-
இணைய அபாயங்கள் குறித்து சிறுவர்களின் வயதிற்கு ஏற்ற வகையில் நட்புடன் திறந்தவெளி உரையாடல்களை நடத்துதல்.
-
சமூக ஊடகங்களில் சிறுவர்களின் புகைப்படங்களைப் பகிரும்போது தனியுரிமை அமைப்புகளைப் (Private settings) பயன்படுத்துதல்.
-
அந்நியர்களுடன் தனிப்பட்ட தகவல்கள் அல்லது படங்களைப் பகிர்வதைத் தடுத்தல்.
-
செயலிகள் மற்றும் இணையதளங்களைக் கண்காணிக்க பெற்றோர் கட்டுப்பாட்டு (Parental controls) கருவிகளைப் பயன்படுத்துதல்.
-
இணையத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், பயமின்றி தெரிவிக்கலாம் என்ற நம்பிக்கையைச் சிறுவர்களுக்கு ஊட்டுதல்.
டிஜிட்டல் யுகத்தில் சிறுவர்களைப் பாதுகாப்பது விழிப்புணர்வுடன் தொடங்குகிறது. தொழில்நுட்பம் வளர வளர, பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்கள் தகவல்களை அறிந்து, விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் செயல்பட்டு பாதுகாப்பான இணைய சூழலை உருவாக்க வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
