நாட்டின் வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு எவ்வித பரவலான பற்றாக்குறையும் நிலவவில்லை என சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மகரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையில் கொலோஸ்டமி பைகள் (Colostomy Bags) உள்ளிட்ட சில மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், அபேக்ஷா வைத்தியசாலை நிர்வாகம் ஏற்கனவே இச்சம்பவம் குறித்து தெளிவுபடுத்தியுள்ளதாகவும், லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை (Lady Ridgeway Hospital) இது தொடர்பான அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் ஊடாகவே வைத்தியசாலைகளுக்கு மருந்துகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, உள்ளூரில் அங்கீகரிக்கப்படாத, தற்காலிகமாகப் பெற முடியாத அல்லது சந்தையில் கிடைக்காத மருந்துகளை வைத்தியர்கள் கோரிப் பெறுவதற்கு ‘Named Patient Program’ (NPP) என்ற ஒழுங்குமுறை பொறிமுறையும் செயல்பாட்டில் உள்ளது.
அபேக்ஷா வைத்தியசாலைக்குத் தேவையான சில மருந்துகளின் அளவு குறைவாகவே தேவைப்படுவதால், தேவைக்கேற்ப அவற்றை நேரடியாகக் கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு உரிய நிதியை வழங்கி வருவதாக அமைச்சர் விளக்கமளித்தார். மேலும், பொதுமக்களிடம் இருந்து ஆண்டுதோறும் சுமார் 500 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் நன்கொடையாக அபேக்ஷா வைத்தியசாலைக்குக் கிடைக்கப் பெறுகின்றன.
கொலோஸ்டமி பைகள் பற்றாக்குறை குறித்துப் பேசிய அமைச்சர், “அண்மையில் கொள்வனவு செய்யப்பட்ட கொலோஸ்டமி பைகளில் தரக் குறைபாடு கண்டறியப்பட்டதால் அவை நிராகரிக்கப்பட்டன. இதனையடுத்து, பிரதேச மட்டத்தில் சந்தை விலையில் இவற்றை உடனடியாகக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளைச் சுகாதார அமைச்சு வைத்தியசாலைகளுக்கு வழங்கியுள்ளது” எனக் கூறினார்.
மருந்து விநியோகத்தில் எவ்வித பொதுவான பிரச்சினையும் இல்லை எனத் தெளிவுபடுத்திய சுகாதார அமைச்சர், தேவையான சந்தர்ப்பங்களில் வைத்தியசாலைகளுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குமாறு நன்கொடையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
