இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் குறித்து இரு நாடுகளும் ஆராய்ந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கொழும்பில் நடைபெறவுள்ள ‘இலங்கை எக்ஸ்போ 2027’ (Sri Lanka Expo 2027) சர்வதேச கண்காட்சிக்கு வர்த்தகக் குழுவொன்றை அனுப்புவதற்கு பாலஸ்தீனம் விருப்பம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்திற்கான இலங்கைப் பிரதிநிதி ஃபாரூக் முகமது ஃபௌஸர் மற்றும் பாலஸ்தீன தேசிய பொருளாதார அமைச்சர் முஹம்மது அல்-அமுர் ஆகியோருக்கு இடையில் ரமல்லாவில் உள்ள அமைச்சுத் தலைமையகத்தில் இடம்பெற்ற உயர்மட்டச் சந்திப்பின்போதே இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
ரமல்லாவில் உள்ள இலங்கை பிரதிநிதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை விரிவுபடுத்துதல், முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துதல் மற்றும் இருநாட்டு வணிக அமைப்புகளுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துதல் ஆகிய விஷயங்கள் குறித்து இச்சந்திப்பில் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
2027 ஆம் ஆண்டு ஜனவரி 14 முதல் 17 ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற திட்டமிடப்பட்டுள்ள ‘இலங்கை எக்ஸ்போ 2027’ கண்காட்சி குறித்து இச்சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
இச்சந்திப்பின் போது, பாலஸ்தீன வணிகங்கள் புதிய சந்தைகளை ஆராயவும், வர்த்தக பங்கான்மைகளை உருவாக்கவும், இலங்கை வர்த்தகர்களுடன் முதலீட்டு இணைப்புகளை ஏற்படுத்தவும் இக்கண்காட்சி ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என அமைச்சர் அல்-அமுரிடம் தூதுவர் ஃபௌஸர் விளக்கமளித்தார்.
மேலும், கொழும்பு துறைமுக நகரம் (Port City Colombo) உள்ளிட்ட இலங்கையில் உள்ள வளர்ந்து வரும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் சுட்டிக்காட்டிய அவர், இலங்கையின் பொருளாதார முயற்சிகளில் பாலஸ்தீன தனியார் துறை அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பாலஸ்தீன வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின் உறுப்பினர்கள், அரச மற்றும் தனியார் துறைப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்கி இலங்கை எக்ஸ்போ 2027 நிகழ்வில் பங்கேற்குமாறு அமைச்சர் அல்-அமுருக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட அமைச்சர் அல்-அமுர், கொழும்பில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு பாலஸ்தீன வர்த்தக தூதுக்குழுவை தலைமை தாங்கி அழைத்து வரத் தயார் எனத் தெரிவித்தார்.
மேலும், பாலஸ்தீன உற்பத்திகளுக்கு இலங்கையில் சந்தை வாய்ப்புகளை உருவாக்குவது, சந்தை அணுகலை எளிதாக்குவது மற்றும் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான புதிய வழிகளைக் கண்டறிய தனியார் துறை வலைப்பின்னல்களை வலுப்படுத்துவது குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.
ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான இராஜதந்திர உறவுகள் மூலம் கட்டியெழுப்பப்பட்ட இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை அமைச்சர் அல்-அமுர் இச்சந்திப்பின் போது நினைவு கூர்ந்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஈடுபாட்டை மேலும் ஆழப்படுத்தவும் வணிகத் தொடர்புகளை பலப்படுத்தவும் இரு தரப்பும் மீள உறுதிபூண்டுள்ளன.
