கொழும்புவில் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையேயான முதலாவது சைபர் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சைபர் பாதுகாப்பு நிர்வாகம், செயற்கை நுண்ணறிவு (AI) மூலமாக ஏற்படும் புதிய அச்சுறுத்தல்கள், சைபர் நெருக்கடி மேலாண்மை மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பரந்த இருதரப்பு பங்களிப்பின் ஒரு பகுதியாக இந்த ஆலோசனைகள் நடைபெற்றதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் இந்திய தூதுக்குழு சார்பில் CERT-In அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் சஞ்சய் பால் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் சைபர் ராஜதந்திரப் பிரிவு இணைச் செயலாளர் அமித் சுக்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.
சுற்றுப்பயணத்தின் போது, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்னவை இந்திய தூதுக்குழு சந்தித்தது. அப்போது சைபர் பாதுகாப்பு நிர்வாக கட்டமைப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் சைபர் பாதுகாப்பிற்கு ஏற்படும் புதிய சவால்கள் குறித்து பேசப்பட்டது. மேலும், சைபர் அச்சுறுத்தல் மதிப்பீடுகள் மற்றும் CERT-In அமைப்பின் சிறந்த நடைமுறைகள், குறிப்பாக திறன் மேம்பாடு மற்றும் சம்பவங்களுக்கான விரைவு பதில் நடவடிக்கைகள் (Incident Response) குறித்து பகிர்ந்து கொள்வது குறித்தும் இருதரப்பும் விவாதித்தன.
தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான டாக்டர் அனில் ஜெயந்த பெர்னாண்டோவையும் இந்திய தூதுக்குழு சந்தித்தது. இரு நாடுகளின் பாதுகாப்பான நிதி அமைப்பு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தைப் பேணுவதற்கான கூட்டு இலக்கிற்கு ஆதரவாக சைபர் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, இலங்கை CERT தலைவர் திலக் மாதிரகே மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் கனிஷ்க கருணாசேன ஆகியோருடன் விரிவான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதில் அறிவுப் பரிமாற்றம், திறன் மேம்பாடு, சைபர் நெருக்கடி மேலாண்மை, மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் (Quantum Computing) – செயற்கை நுண்ணறிவு தொடர்பான தேசிய அளவிலான மூலோபாயங்களை உருவாக்குதல் ஆகிய சாத்தியமான துறைகளில் மேலும் இணைந்து செயல்படுவது பற்றி விவாதிக்கப்பட்டது.
டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இந்தியா-இலங்கை இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகவே இந்த ஆலோசனைகள் அமைந்துள்ளன என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
