இலங்கையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி, சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே மதக் கலவரத்தைத் தூண்டும் நோக்கில் செயல்பட்ட ஒரு சதிவலையைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) முறியடித்துள்ளது.
இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த ஜே.எம். அமோத்ய மதிஷ தமோஷ என்ற 21 வயது சிங்கள இளைஞன், முஸ்லிம் பெயர்களைப் பயன்படுத்தி போலியான வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கியுள்ளான். இந்தக் குழுக்களில் புத்த பெருமானின் உருவப்படங்களை இழிவாகவும் ஆபாசமாகவும் சித்தரித்துப் பதிவிட்டதுடன், தம்புள்ளை விகாரை, ஸ்ரீ தலதா மாளிகை, ஸ்ரீ மகா போதி உள்ளிட்ட புனித தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாகவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளான்.
தம்புள்ளை விகாரையின் விகாராதிபதி கலாநிதி தம்பகஹமுலே ஆனந்த அனுநாயக்க தேரர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட CID-யின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர், குறித்த இளைஞனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணைகளில், அந்த இளைஞன் பௌத்த மதத்திற்கு எதிரான கருத்துக்கள் பரப்பப்பட்ட அந்த வாட்ஸ்அப் குழுவின் நிர்வாகியாகச் (Admin) செயற்பட்டமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சந்தேகநபரை எதிர்வரும் அக்டோபர் 16-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
திகன, களுத்துறை, அளுத்கமை போன்ற முன்னைய சம்பவங்களைப் போலவே, இதுவும் மத வெறுப்பைப் பரப்பி இனக் கலவரத்தைத் தூண்டும் ஒரு திட்டமிட்ட சதி எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த இளைஞனை இத்தகைய செயலைச் செய்யத் தூண்டியவர்கள் யார், இதற்குப் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பதைக் கண்டுபிடித்துச் சட்டத்தின் முன் நிறுத்துவது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும் எனச் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.
