முஸ்லிம் பெண் சுகாதார ஊழியர்களின் ஆடை உரிமை மற்றும் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் அவசர கோரிக்கை

Date:

அரச மருத்துவமனைகளில் கடமையாற்றும் முஸ்லிம் பெண் சுகாதார ஊழியர்களின் ஆடை உரிமை மற்றும் அரசியலமைப்பு ரீதியான அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு பாராளுமன்றத்தில் குரல்கொடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் எம்.என்.எம். ஷாம் நவாஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அண்மையில் நாகொட மருத்துவமனையிலும், அதற்கு முன்னர் கல்முனை வடக்கு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரச மருத்துவமனைகளிலும் முஸ்லிம் பெண் சுகாதார ஊழியர்களின் மத ரீதியான ஆடைகள் தொடர்பில் அசௌகரியமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவ்வாறான நெருக்கடிகளுக்கு உள்ளாகும் முஸ்லிம் பெண் சுகாதார ஊழியர்களின் உரிமைகளுக்காக பிரதிநிதிகள் சபையில் குரல்கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இது தொடர்பாக பின்வரும் முக்கிய அம்சங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றன:
  1. அரசியலமைப்பு ரீதியான அடிப்படை உரிமைகள்:
    இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 10 ஆம் பிரிவின் கீழ் சிந்தனை, மனசாட்சி மற்றும் மத சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 14(1)(e) பிரிவின் படி ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது மதத்தைப் பின்பற்றுவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும், போதிப்பதற்கும் அரசியலமைப்பு ரீதியான அடிப்படை உரிமை அளிக்கடைந்துள்ளது.
  2. அரசியலமைப்பின் மேலாதிக்கம்:
    முஸ்லிம் பெண் சுகாதார ஊழியர்கள் தங்களது மத ரீதியான ஆடைகளை அணிவதைத் தடுக்கும் எந்தவொரு பாராளுமன்றச் சட்டமும் நிறைவேற்றப்படவில்லை. ஒருவேளை இவ்வாறான ஏதேனும் நிறுவன விதிமுறைகள் இருந்தாலும், நாட்டின் உச்ச சட்டமான அரசியலமைப்பிற்கு மேலாக எந்தவொரு சட்டமோ அல்லது சுற்றறிக்கையோ தொழிற்பட முடியாது.
  3. சீருடை தொடர்பான நெகிழ்வுத்தன்மை:
    சுகாதாரத் துறையின் சீருடை என்பது மாற்ற முடியாத ஒன்று அல்ல என்பதற்கு தெளிவான சான்றுகள் உள்ளன. 2003 ஆம் ஆண்டின் சுற்றறிக்கை மூலம் கர்ப்பிணிச் சுகாதார ஊழியர்களுக்கு வசதியான சீருடையைப் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து, சேவையின் தேவை மற்றும் மனித/மதத் தேவைகளைக் கருத்திற் கொண்டு சீருடையில் பொருத்தமான மாற்றங்களைச் செய்ய அரசுச் சேவையில் இடமுண்டு என்பது தெளிவாகிறது.
  4. அரசாங்க ஒழுங்குவிதிகளை மீறவில்லை என்பதற்கான சான்று:
    நாகொட மற்றும் கல்முனை வடக்கு மருத்துவமனைச் சம்பவங்கள் இரண்டிலும், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தீர்வு அவர்களை வேறு அரச மருத்துவமனைகளுக்கு இடமாற்றம் செய்வதாகும். அவர்களின் ஆடை முறைமை அரச சேவையின் பொதுவான விதிமுறைகளுக்கு முரணானதாக இருந்திருந்தால், அவர்களுக்கு வேறு அரச மருத்துவமனைகளில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருக்காது. எனவே, இந்த ஆடை அணிதல் அரசாங்க விதிமுறைகளுக்கு எதிரானது அல்ல என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
ஆகவே, முஸ்லிம் பெண் சுகாதார ஊழியர்கள் தங்களது தொழில்முறை கடமைகளை ஆற்றும் அதேவேளையில், தங்களது மத நம்பிக்கைகளைப் பேணி நடப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்தவும், நிறுவன மட்டத்தில் இடம்பெறும் இவ்வாறான அசௌகரியங்களைத் தடுக்கவும் பாராளுமன்றத்தில் குரலெழுப்பி நாட்டில் ஜனநாயகம் தழைக்க அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்வர வேண்டும் என அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை; விசேட வைத்திய நிபுணர்!

நாட்டில் மனநல வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மனநல...

களுத்துறை நாகொட வைத்தியசாலையில் ஹிஜாப் ஆடை விவகாரம்: அரச சுற்றுநிருபத்தின்படியே நடவடிக்கை என பணிப்பாளர் விளக்கம்

களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார சேவை உதவியாளர் ஒருவர்...

அரசார்பற்ற நிறுவனங்களுக்கான (NGO) புதிய சட்ட வரைவு: தீவிரமாக நடைமுறைப்படுத்தப்போகும் அரசு: மத மற்றும் சிவில் அமைப்புகளுக்கு விடுக்கப்படும் அவசர வேண்டுகோள்!

அரசார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகத்தின் (NGO Secretariat) பணிப்பாளர் நாயகம் சந்திரரத்னே விதானகே அவர்களுடன்...

தடுப்புக் காவல் இடமாக மாறும் CCIB

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய குற்றவியல் புலனாய்வுப் பணியகத்தை ஒரு...