அரசார்பற்ற நிறுவனங்களுக்கான (NGO) புதிய சட்ட வரைவு: தீவிரமாக நடைமுறைப்படுத்தப்போகும் அரசு: மத மற்றும் சிவில் அமைப்புகளுக்கு விடுக்கப்படும் அவசர வேண்டுகோள்!

Date:

அரசார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகத்தின் (NGO Secretariat) பணிப்பாளர் நாயகம் சந்திரரத்னே விதானகே அவர்களுடன் பத்தரமுல்லை உள்ள அலுவலகத்தில் நேற்று (07) புதன்கிழமை நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலில், புதிய என்.ஜி.ஓ சட்ட வரைவு (NGO Draft Bill) மற்றும் அதன் மூலம் கொண்டுவரப்படவுள்ள கட்டுப்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

தேசிய கிறிஸ்தவ எவாஞ்சலிக்கல் கூட்டமைப்பு (NCEASL), முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம், தென் மாகாண இளைஞர் மற்றும் அபிவிருத்திக்கான நிலையம் உள்ளிட்ட பல சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட முக்கிய அம்சங்கள்:

1. புதிய சட்ட வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள ‘தகுதிவாய்ந்த அதிகாரி’ (Competent Authority) நியமனம் குறித்த தீவிர கரிசனைகள் முன்வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அந்தப் பதவியின் பெயரை மாற்றி வேறொரு முறையில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

2.புதிய சட்டத்தின் பிரகாரம் மத நிறுவனங்கள் உட்பட எந்தவொரு அமைப்பும் நன்கொடைகள் அல்லது நிதியைப் பெற்று சமூக சேவைகளில் ஈடுபட்டால், அதற்குரிய கணக்கு வழக்குகளைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், பெறப்படும் நிதியில் குறைந்தபட்சம் 75% நேரடியாக மக்களைச் சென்றடையும் நிவாரண அல்லது சமூக சேவைகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். தற்போதைய ஆய்வுகளின்படி, 10-20% மட்டுமே மக்களுக்குச் சென்றடைவதாகவும், ஏனையவை நிர்வாகச் செலவுகளுக்கே பயன்படுத்தப்படுவதாகவும் பணிப்பாளர் நாயகத்தினால் சுட்டிக்காட்டப்பட்டது.

3. நிதிச் சலவை (Money Laundering) மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் சர்வதேச விதிமுறைகளுக்கு (FATF) அமைவாகவே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத ‘ஹவாலா அல்லது உண்டியல் முறைகளைத் தவிர்த்து, முறையான வங்கி வழிகளிலேயே பணப்பரிமாற்றங்கள் நடைபெறுவதை உத்தரவாதப்படுத்துவதும் இச்சட்டமூலத்தின் முக்கியமான பகுதி என பணிப்பாளர் நாயகம் தெளிவுபடுத்தினார்.

4. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கைகளின்படி, நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதே இவ்வாறான அசம்பாவிதங்களுக்கு வழிவகுத்ததாகக் குறிப்பிட்ட பணிப்பாளர் நாயகம், தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் குறித்த அறிக்கைகளையும் இங்கு சமர்ப்பித்தார்.

எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் இச்சட்டமூலத்தின் பரிந்துரைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, சட்டமாக்கப்படவுள்ளதாகவும் (Parliament Act) அவர் மேலும் தெரிவித்தார்.

5.இச்சட்டமூலம் குறித்து யாரும் அஞ்சத் தேவையில்லை. நாட்டில் ஒரு ஒழுங்குமுறையை ஏற்படுத்தவும் அனைவரையும் பாதுகாக்கவுமே இச்சட்டம் தாயரிக்கப்பட்டுள்ளது எனவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சந்திரரத்னே விதானகே அவர்களுடனான மேற்படி சந்திப்பை தொடர்ந்து முஸ்லிம் லீக் வாலிப முன்னிகளின் தலைவர் திரு. ஷாம் நவாஸ் முஸ்லிம் மற்றும் சிவில் அமைப்புகளுக்கு பின்வரும் அவசர கோரிக்கையை விடுத்துள்ளார்.

அதன் விபரம்:

நடைமுறைப்படுத்தப்படவுள்ள சட்டமூலமானதுவெளிநாடுகளிலிருந்தும் ஏனைய மூலங்களிலிருந்தும் நிதியுதவிகளைப் பெறும் முஸ்லிம் நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள், தங்களது கணக்கு வழக்குகளைத் துல்லியமாக கணக்காய்வு (Audit) செய்து வெளிப்படைத்தன்மையைப் பேண வேண்டியது இனிமேல் கட்டாயமாக்கப்படுகிறது.

நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, இந்தச் சட்ட வரைவிலுள்ள சாதக, பாதகங்களை ஆராய்ந்து, அமைப்புகளைப் பலப்படுத்தவும் பாதுகாக்கவும் உடனடியாக சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கலந்தாலோசனைகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளை (Workshops) நடத்த வேண்டும் எனவும் திரு. ஷாம் நவாஸ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தடுப்புக் காவல் இடமாக மாறும் CCIB

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய குற்றவியல் புலனாய்வுப் பணியகத்தை ஒரு...

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தும் சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு சவுதி அரேபியாவில் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உடனடியாக...

களுத்துறையில் 8 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை நகரை அண்மித்த சில பகுதிகளில் இன்றைய தினம் 8 மணித்தியாலங்களுக்கு...

அனோஜன் வழக்கில் சிறப்பு சட்டத்தரணிகள் குழு பேச்சுவார்த்தை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தண்டனையை ரத்து செய்வது...