அதிக வட்டி விகிதங்கள் மற்றும் கடுமையான திருப்பிச் செலுத்தும் நிபந்தனைகள் காரணமாக வாடிக்கையாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகக் கிடைக்கும் முறைப்பாடுகளை அடுத்து, ஆன்லைன் உடனடி கடன் சேவைகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தள விளம்பரங்கள் மூலம் பல உடனடி கடன் சேவைகள் தற்போது பிரபாரம் செய்யப்பட்டு வருவதுடன், கையடக்கத் தொலைபேசி செயலிகள் (Mobile Apps) ஊடாக பொதுமக்கள் இணையவழியில் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தும் போது சில கடன் வழங்கும் நிறுவனங்கள் அதிக வட்டி விகிதங்களுடன் தவணைப்பணத்தை அறவிட்டு வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வருவதாகக் கிடைத்த தகவலை அடுத்து, CIDயின் நிதி மோசடி விசாரணைப் பிரிவு விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகக் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், கடன் வழங்கும் நிறுவனங்களால் விதிக்கப்படும் நிபந்தனைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமலேயே சில கடன் வாங்குபவர்கள் கடன்களைப் பெற்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடன் தொகைகள் எவ்வாறு மீளப் பெறப்படும் என்பது குறித்தும், செயலிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் கடன் பெறுபவரையே சாரும் என்பது குறித்தும் இந்த நிறுவனங்கள் விதித்துள்ள நிபந்தனைகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், சம்பந்தப்பட்ட நிபந்தனைகளை முழுமையாக வாசிக்காமலோ அல்லது புரிந்து கொள்ளாமலோ சிலர் இந்தத் தொலைபேசி செயலிகளை நிறுவி கடன்களைப் பெற்றுக்கொள்வதாக விசாரணையாளர்கள் அவதானித்துள்ளனர்.
எனவே, இணையதள தளங்கள் ஊடாக உடனடி கடன்களைப் பெற்றுக்கொள்ளும் போது பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்படுமாறும், அனைத்து நிபந்தனைகளையும் கவனமாக வாசித்துப் புரிந்து கொண்ட பின்னரே கடனுக்காக ஒப்புதல் வழங்குமாறும் இலங்கை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இது போன்ற கடன்களைப் பெறுவதற்கு முன்பு நிபந்தனைகளைப் பற்றித் தெளிவான புரிதலைப் பெறுவது, நிதி இழப்புகள் மற்றும் திருப்பிச் செலுத்துதலின் போது ஏற்படும் பிற சிரமங்களைத் தவிர்க்க உதவும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
