மார்க்க அறிஞர் தஸ்லீம் மெளலவி காலமானார்; தேசிய ஷூரா சபை அனுதாபம்
தேசிய ஷூரா சபையின் முதல் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் அதன் பொதுச்சபை உறுப்பினரும் சிறந்த ஒரு இஸ்லாமிய மார்க்க அறிஞரும், மதிப்பிற்குரிய ஆலிமும், இமாமும், ஆசிரியருமான மௌலவி தஸ்லீம் அவர்கள் காலமானார்.
மர்ஹூம் அவர்கள் கள்எலியாவில் பிறந்து, கொழும்பு மட்க்குளியில் வசித்து வந்தார்கள்.
அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடனும், மார்க்கப் பற்றுடனும் பல்வேறு பள்ளிவாசல்களில் இமாமாகவும், இஸ்லாமிய ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்கள். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:
– கொழும்பு பெரிய பள்ளிவாசலின் முன்னாள் இமாம்.
– மாதாமொட்டிய ஜும்ஆப் பள்ளிவாசல்.
– வத்தல்பொல பள்ளிவாசல் – பாணந்துறை.
– மல்லவபிட்டிய ஜும்ஆப் பள்ளிவாசல் – குருநாகல்.
– தேசிய ஷூரா சபை (National Shura Council),
-ஷரீஆ சபை (Shareeah Council) உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய நிறுவனங்களிலும் சேவையாற்றியுள்ளார்கள்.
குறிப்பாக தேசிய ஷூரா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக இருந்த காலத்தில் அதன் பல்வேறு வேலைத் திட்டங்களில் அர்ப்பணிப்புடன் அவர் செயல்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
தேசிய ஷூரா சபை பற்றிய அறிமுகக் கூட்டங்கள் நாட்டின் பல பகுதிகளில் நடந்த போது செயற்குழு மற்றும் செயலகக் குழு உறுப்பினர்களுடன் அங்கு சென்று ஷுரா சபையை உரமூட்டி வளர்ப்பதில் பங்களிப்புச் செய்ததை நன்றியுணர்வுடன் ஷுரா சபை நினைவுகூருகிறது.
கிண்ணியா,கல்முனை,சியாம்பளாகஸ் கொடுவ போன்ற பல இடங்களுக்கும் அவர் அவ்வாறு சென்றமை பசுமையான நினைவுகளாகும்.
டாக்டர் ஸைபுல் இஸ்லாத்தின் தலைமையில் இயங்கிய தேசிய ஷூரா சபையின் சமாதான சகவாழ்வுக்கான உபகுழுவின் வேலைத் திட்டங்களில் அவர் அதிகம் பங்கெடுத்துள்ளார். மெளலவி தஸ்லீம் அவர்களை ஷூரா சபையுடன் இணைப்பதிலும் அவரது பங்களிப்பைப் பெற்றுத் தருவதிலும் அவரது ஆப்த நண்பர் மெளலவி ஸியாத் அவர்களுக்கு கணிசமான பங்கிருந்தது.
நிறைவேற்றுக் கூட்டங்கள் நடைபெறும் போது தனது வீட்டில் தயாரித்த சிற்றூண்டிகளை அவ்வப்போது உறுப்பினர்களுக்காக எடுத்து வரும் நற்பழக்கமும் அவரிடம் இருந்தது.
எப்போதும் மலர்ந்த முகத்துடன் பண்பாடாக இருந்த அவர் யாவராலும் மதிக்கப்பட்டார்.அவ்வப்போது விகடமாகவும் அவர் பேசுவதுண்டு. அவரிடம் கொள்கைப் பிடிவாதம் இருக்கவில்லை என்பதுடன் சகல சிந்தனைப் பள்ளிகளைச் சேர்ந்தவர்களுடனும் மனம்திறந்து பழகும் தன்மையைக் கொண்டிருந்தமை அவரது சிறப்புப் பண்பாக இருந்தது.
இஸ்லாமியக் கல்வி, மார்க்க வழிகாட்டல் மற்றும் சமூகப் பணிகளில் அவர்கள் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகள் பல. அவருடைய சேவைகளை அல்லாஹுத்தஆலா மனப்பூர்வமாக கபூல் செய்வானாக! ஆமீன்!
அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் குறைகள் மற்றும் பிழைகளை மன்னித்து, தனது அளவற்ற அருளைப் பொழிந்து, ஜன்னத்துல் பிர்தௌஸில் உயர்ந்த அந்தஸ்தை வழங்குவானாக!
அன்னாரின் குடும்பத்தினர், உறவினர்கள், மாணவர்கள் மற்றும் அனைவருக்கும் இப்பேரிழப்பைத் தாங்கிக்கொள்ள அழகிய பொறுமையையும் மனவலிமையையும் வழங்குவானாக!