ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்
ஆரம்பத்தில் இந்தச் சந்திப்பு தற்செயலானது என சுரேஷ் சலே கூறியிருந்த போதிலும், தொலைபேசித் தரவுகள் (Telephone records) குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக திலீப பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சூழ்நிலைச் சான்றுகள் அசாத் மௌலானா முன்வைத்த சில குற்றச்சாட்டுகளுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதாகவும் அவர் வாதிட்டார்.
தாக்குதலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே, ‘தம்பி அண்ணா’ என அழைக்கப்படும் உளவாளி ஒருவர் சஹ்ரான் ஹாஷிம் குறித்த தகவல்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கியிருந்ததாகவும், சுரேஷ் சலேயின் அறிவுறுத்தலின் பேரில் அந்த ஆவணக்கோவை மறைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் தொடர்பு குறித்தும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது சுரேஷ் சலே சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பதை ஆராய நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட விசேட வைத்தியக் குழுவின் 31 பக்க அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சலே உளவியல் அழுத்தத்தை மட்டுமே தெரிவித்ததாகவும், உடல் ரீதியான சித்திரவதைகள் குறித்து எதனையும் கூறவில்லை எனவும் திலீப பீரிஸ் வாதிட்டார்.
எனினும், சுரேஷ் சலே சார்பில் ஆஜரான சட்டத்தரணி பானுக மல்லவ ஆராய்ச்சி இதனை மறுத்ததுடன், தமது கட்சிக்காரருக்கு இழைக்கப்பட்ட இழிவான உடல் பரிசோதனை குறித்து அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், தடுப்புக்காவல் துன்புறுத்தல்கள் குறித்து மேலதிக விசாரணைக்கு வைத்தியக் குழு பரிந்துரைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இந்த வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடுவதற்குப் போதுமான சான்றுகள் உள்ளதாகத் தாம் கருதுவதாகத் தெரிவித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், அவரைக் கைது செய்வது தொடர்பான தீர்மானம் விசாரணை அதிகாரிகளிடமே உள்ளதாக நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.