முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ (Protection of the State from Terrorism Act – PSTA) தொடர்பில் பரந்தளவிலான பொதுமக்கள் கலந்தாலோசனைகள் நடத்தப்படும் வரை இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படக் கூடாது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, இன்று (23) பாராளுமன்றத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் இவ்விடயத்தை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், கடந்த நவம்பர் 7-ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பொதுமக்கள் கலந்தாலோசனை நடத்தப்படும் என அறிவித்திருந்த போதிலும், இன்று பிற்பகல் ‘ஆளுகை தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு’ (Sectoral Oversight Committee on Governance) இச்சட்டமூலம் குறித்து ஆராயக் கூடவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இக்குழுவில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களான பைசர் முஸ்தபா, அஜித் பி. பெரேரா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முஜிபுர் ரஹ்மான் மற்றும் தானும் இணைந்து சபாநாயகரிடம் எழுத்துப்பூர்வ கோரிக்கையொன்றைச் சமர்ப்பித்துள்ளதாக சாணக்கியன் தெரிவித்தார். அக்குழு விவாதங்களை முன்னெடுக்கலாம் எனினும், இறுதி முடிவை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.
கலந்தாலோசனைகளில் பங்கேற்க பெருமளவிலான சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டிய அவர், குழு தீர்மானம் எடுப்பதற்கு முன்னர் அவர்களுக்குத் தமது கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
1979-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) சுட்டிக்காட்டிய சாணக்கியன், புதிய மாற்றுச் சட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்னர் பாராளுமன்றம் அதனை மிகவும் கவனமாக ஆராய வேண்டும் என எச்சரித்தார்.
சட்டம் இயற்றப்பட்ட பின்னர் அதனை மீளாய்வு செய்யும் பொறிமுறை பாராளுமன்றத்தில் இல்லாததால், சட்டம் இயற்றப்படுவதற்கு முந்தைய கட்டம் மிகவும் முக்கியமானது என அவர் வாதிட்டார்.
இக்கருத்துக்களுக்குப் பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலம் உயர்நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் ஜனாதிபதி கலந்தாலோசனைகளை நடத்துவதாக உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.
கலந்தாலோசனைகளில் கலந்துகொள்பவர்கள் தாமே பங்கேற்கக் கோரியதாகவும், மேலதிக கரிசனைகள் ஏதேனும் இருப்பின் அவற்றைத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன் எழுப்ப முடியும் என்றும் அவர் கூறினார்.
மேலும், இவ்விடயம் பிரதி சபாநாயகரின் தீர்ப்பின் மூலமல்லாது, குறித்த குழுவினாலேயே தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்போது தலையிட்ட பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, இவ்விடயம் குழு மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும் என்றும், பாராளுமன்றத்தில் இது குறித்து மேலும் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து எதிர்ப்பை வெளியிட்டனர்.
இவ்விடயத்தில் தலையிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் ரவூப் ஹக்கீம், இதனைத் துறைசார் மேற்பார்வைக் குழுவிற்குள் மாத்திரம் மட்டுப்படுத்த வேண்டும் என்ற நீதி அமைச்சரின் நிலைப்பாட்டை நிராகரித்தார்.
பாராளுமன்றத்தினாலேயே அக்குழு நிறுவப்பட்டது என்பதால், இவ்விடயத்தில் தீர்மானிக்கும் அதிகாரம் சபைக்கு உண்டு என வாதிட்ட அவர், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் மீறப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், சாணக்கியன் இராசமாணிக்கத்தின் கரிசனைகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதி சபாநாயகர், இவ்விடயம் குழு மட்டத்திலேயே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார்.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.