அமெரிக்க இடைத்தேர்தல் முடிவு: ஒரு மன நோயாளிக்கு எதிரான தெளிவான தீர்ப்பு! – மு. தமிமுன் அன்சாரி MLA கருத்து
அமெரிக்க இடைத்தேர்தல் முடிவானது ஒரு மன நோயாளிக்கு எதிரான தெளிவான தீர்ப்பு என தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் மனித நேய ஜனநாயகக்கட்சித் தலைவருமான மு. தமிமுன் அன்சாரி கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும் அமெரிக்காவின் தேர்தல் முறை மிகவும் விசித்திரமானது மற்றும் பின்னலானது. அங்கு அதிபரின் ஆட்சிக்காலம் 4 ஆண்டுகள் என்ற நிலையில், 435 இடங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபைக்கு 2 ஆண்டுக்கு ஒருமுறையும், செனட் சபையின் மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கு 6 ஆண்டுக்கு ஒருமுறையும் இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன. மக்களவை மற்றும் மாநிலங்களவை முறையைப் போன்ற இந்த அமைப்பில் ஏகபோக சர்வாதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிரதிநிதிகள் மூலம் மக்கள் முடிவுகள் வழிநடத்தப்படுகின்றன.
பொதுவாக அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் மிதவாதப் போக்கும், வெளிநாடுகள் மீதான போர்கள் குறைவாகவும் இருக்கும். ஆனால் குடியரசுத் கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் குழப்பங்களும், வெளிநாடுகள் மீதான போர்வெறியும் எல்லை மீறுவது வழக்கம். அவ்வகையில் குடியரசுத் கட்சியின் சார்பில் அதிபரான டொனால்ட் ட்ரம்ப், ஒரு சர்வாதிகாரி என்ற நிலையைத் தாண்டி மன நோயாளியாகவே உலக மக்களால் அச்சத்துடன் பார்க்கப்பட்டார்.
தற்போது அமெரிக்காவில் வெளியான செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை இடைத்தேர்தல் முடிவுகள் அந்த அச்சத்திற்குப் பெரும் ஆறுதலை அளித்துள்ளன. இரண்டு சபைகளிலும் ஜனநாயகக் கட்சி அதிகமான இடங்களைக் கைப்பற்றியுள்ளதன் மூலம், அதிபர் ட்ரம்பும் குடியரசுத் கட்சியினரும் தங்கள் மனம் போன போக்கில் முடிவுகளை எடுக்க முடியாதவாறு அமெரிக்க வாக்காளர்கள் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.
முக்கியமாக, ஈரான் மீதான அமெரிக்கப் போருக்கு எதிரான தீர்ப்பாகவும் இது உலகமெங்கும் வரவேற்கப்படுகிறது. ஈரான் மீதான போரை அமெரிக்க மக்கள் விரும்பவில்லை என்பதை இந்தத் தேர்தல் முடிவு வெளிப்படுத்தியிருப்பதை அதிபர் ட்ரம்பே ஏற்றுக்கொண்டுள்ளார். இதனிடையே, ட்ரம்ப் மற்றும் குடியரசுத் கட்சியின் வெற்றிக்கு ஆதரவாக ரூ. 4,700 கோடி வரை செலவு செய்த உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது “விண்வெளி லேசர்கள் இந்த தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை” எனத் தன்னையே நையாண்டி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். போர்வெறிக்கும் அநீதிக்கும் துணைபோன அவருக்கு அமெரிக்க மக்கள் தங்களது வாக்கின் மூலம் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.
அமெரிக்க அரசின் வெளியுறவுக் கொள்கைகளும் பென்டகனின் ராணுவ நடவடிக்கைகளும் உலக அமைதியைச் சீர்குலைப்பதால் அமெரிக்கா மீது உலக மக்கள் வெறுப்பைக் உமிழ்ந்தாலும், யதார்த்தத்தில் பெரும்பாலான அமெரிக்க மக்கள் போர்வெறிக்கு எதிரான நல்லவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை இந்தத் தேர்தல் மீண்டும் நிருபித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் உள்நாட்டு ஜனநாயகம் உயிர்ப்போடு இருப்பது உறுதியாகியுள்ளது.
வெள்ளை நிறவெறியராகவும் மதவெறியராகவும் மாறி, இஸ்லாத்திற்கு எதிராக மோசமான கருத்துக்களைத் தெரிவித்த ட்ரம்பையும் அவரது கொள்கைகளையும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அமெரிக்கர்கள் முற்றிலுமாக நிராகரித்துள்ளனர். இந்தத் தேர்தலில் ‘இந்தியாவின் மருமகன்’ அப்துல் எல் செய்யது நாட்டின் முதல் முஸ்லிம் செனட்டராகவும், கருப்பின சமூகத்தைச் சேர்ந்த ஹக்கீம் ஜெஃப்ரிஸ் பிரதிநிதிகள் சபையின் முதல் சபாநாயகராகவும் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளனர். மேலும், இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் ட்ரம்ப் பல நெருக்கடிகளைக் கொடுத்தபோதிலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருணா மில்லர், பியா தண்டியா, பிரமிளா ஜெயபால், பூஜா சேத்தி போன்ற பலர் பல்வேறு பொறுப்புகளுக்குத் தேர்வாகியுள்ளனர்.
இந்தத் தேர்தலில் முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கதாநாயகனாக உருவெடுத்து, “முட்டாள்களிடமிருந்து இந்த தேசத்தைக் காப்பாற்ற வேண்டும்” என ட்ரம்ப் மீது கடும் தாக்குதல் நடத்திப் பிரசாரத்தை விறுவிறுப்பாக்கினார். இதனால் அவர் இன்று உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் கொண்டாடப்படுகிறார். 30 நாட்களுக்குள் ஈரானை அடக்குவோம் என்று உறுமிவிட்டு 6 மாதங்கள் ஆகியும் ஈரானை அசைக்க முடியாமல், ஈரான் போர்முனையிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்திக்கும் நிலைக்கு ட்ரம்ப் தள்ளப்பட்டுள்ளார்.
ஈரானுக்கு எதிரான போரினால் உலகம் முழுவதும் உருவான பதற்றம், விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி அமெரிக்கர்களையும் பாதித்த நிலையில், ஒரு மன நோயாளியை அதிபராகத் தேர்ந்தெடுத்துவிட்டோமே என்று வருந்திய அமெரிக்க மக்கள் இந்த இடைத்தேர்தல் மூலம் தங்களது தவறைச் சரிசெய்துள்ளனர்.
இந்தத் தேர்தல் முடிவு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் வாழும் மக்களுக்கும் அரசுகளுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், ட்ரம்பின் இந்தத் தோல்வியைக் கண்டு அமெரிக்கக் குடியரசுத் கட்சியினர், இஸ்ரேலிய வலதுசாரியினர் மற்றும் இந்தியாவில் உள்ள வலதுசாரி பாசிஸ்டுகள் ஆகிய மூன்று தரப்பினர் மட்டுமே சோகத்தில் மூழ்கியுள்ளனர். இவர்கள் மூவருக்கும் “அமைதியையும் ஜனநாயகத்தையும் சீர்குலைக்காதீர்கள்” என்ற வலுவான செய்தியை அமெரிக்க மக்கள் இத்தேர்தல் மூலம் உரக்கச் சொல்லியிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.