Friday, November 6, 2026

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

1 min read · 1 reads

இலங்கையின் தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று (06) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 நவம்பர் 06ஆம் திகதி காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த 24 மணித்தியாலங்களுக்கான கடற்பரப்பு வானிலை முன்னறிவிப்பின்படி, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடற்பரப்புகளில் காற்று கிழக்கு திசையிலிருந்து அல்லது குறிப்பிட்ட திசையின்றி வீசுவதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 20 முதல் 30 கிலோமீற்றர் வரை காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அச்சந்தர்ப்பங்களில் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.