Thursday, November 26, 2026

செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றத்தை ஒப்புக்கொண்டார் டயானா கமகே!

1 min read · 1 reads

செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்ததாகத் தமக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (26) ஒப்புக்கொண்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஜூலை 17 முதல் 2016 ஆம் ஆண்டு ஜூலை 16 வரையிலான காலப்பகுதியில் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை தொடர்பான குற்றச்சாட்டையே அவர் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் தண்டனைத் தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய, குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) டயானா கமகேவுக்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது.

பல்வேறு காலப்பகுதிகளில் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை மற்றும் இலங்கை கடவுச்சீட்டைப் பெறுவதற்காகக் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்குப் போலித் தகவல்களை வழங்கியமை ஆகியவை இதில் உள்ளடங்கும்.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்த வழக்கு விசாரணை ஆரம்பமானபோது, தாம் குற்றமற்றவர் என டயானா கமகே தெரிவித்திருந்த நிலையிலேயே, தற்போது விசா மீறல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார்.

பிரித்தானியப் பிரஜாவுரிமை கொண்ட டயானா கமகேவுக்குச் செல்லுபடியாகும் இலங்கைப் பிரஜாவுரிமை இல்லை எனத் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், 2024 ஆம் ஆண்டு மே 8 ஆம் திகதி அவரைப் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தது.

அதனைத் தொடர்ந்து அவர் தனது பாராளுமன்ற ஆசனத்தையும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் பதவியையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.