Tuesday, November 24, 2026

PSTA திருத்த முன்மொழிவுகளை பாராளுமன்றக் குழுவிடம் கையளித்தது சமூக நீதிக் கட்சி: பலஸ்தீன ஆதரவு செயற்பாடுகளை ஒடுக்கக்கூடாது என வலியுறுத்தல்!

2 min read

பாராளுமன்றத்தில் (23) நடைபெற்ற ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய பாராளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ தொடர்பான கூட்டத்தில், மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க மற்றும் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.எம். அஸ்லம் ஆகியோரின் அழைப்பினை ஏற்று சமூக நீதிக் கட்சியின் தலைவரும் தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகர சபையின் உறுப்பினருமான அர்க்கம் முனீர் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி ரஷாத் அஹமத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய பாராளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் தமது முன்மொழிவுகளை முன்வைத்த சமூக நீதிக் கட்சியின் தலைவர் அர்க்கம் முனீர், 9/11 இற்கு பிறகு எவ்வாறு ஏனைய பாரதூரமான குற்றங்களான கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களை விட பயங்கரவாதக் குற்றங்களை முற்றிலும் வித்தியாசமான குற்றங்களாக அடையாளப்படுத்தியதன் பின்னணியிலுள்ள அரசியலை விளக்கியதோடு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) மூலம் பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் பாதிக்கப்பட்டதையும் முன்வைத்து, அவை இருக்கும் சாதாரண குற்றவியல் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலமே கையாளப்பட வேண்டும், மாறாக பயங்கரவாதத்தைத் தடுக்க விசேட சட்டங்கள் கொண்டு வரப்படக்கூடாது என்கின்ற தமது கட்சியின் நிலைப்பாட்டினை முன்வைத்தார்.

எனினும், அரசாங்கம் “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும்” சட்டமூலத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அது பாராளுமன்றக் குழுவில் திருத்தங்களுக்காக முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் உள்ள பாரதூரமான சட்டப்பிரிவுகளான “பயங்கரவாதம் குறித்த தெளிவான வரைவிலக்கணம் இன்மை, நீதவானுக்கு பிணை வழங்கும் அதிகாரமோ அல்லது வழக்கிலிருந்து விடுவிக்கும் அதிகாரமோ வழங்கப்படாமை, எந்தவொரு அமைப்பினையும் ஜனாதிபதியொருவர் நினைக்கும் பட்சத்தில் நீதிமன்ற உத்தரவின்றி தடை செய்ய முடியுமான அதிகாரம் போன்ற பல சட்டப்பிரிவுகள் திருத்தப்பட வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும்” என்றும் தமது கட்சியின் நிலைப்பாடுகளை முன்வைத்தார்.

இறுதியாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட இளைஞர்களான ருஷ்தி மற்றும் சுஹைல் ஆகியோரின் கைதின் பின்னணியில் இஸ்ரேல் எதிர்ப்பும் பலஸ்தீன ஆதரவும் காணப்பட்டமையைச் சுட்டிக்காட்டிய அர்க்கம் முனீர், “இச்சட்டமூலமானது சட்டமாக இயற்றப்படின் அதில் பலஸ்தீன ஆதரவுப் போராட்டங்களோ அல்லது பலஸ்தீன ஆதரவோடு தொடர்புபட்ட எந்தச் செயற்பாடும் இச்சட்டத்தின் கீழ் தீவிரவாதச் செயற்பாடுகளாக கருதப்படக்கூடாது என்ற தெளிவான ஒரு சட்டப்பிரிவு உள்ளடக்கப்பட வேண்டும்” என்றும் பாராளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதன் போது சமூக நீதிக் கட்சியின் முன்மொழிவுகள் பாராளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.