இலங்கை – சவூதி பொருளாதார உறவுகளை வலுப்படுத்த சவூதி பிரதி அமைச்சருடன் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் முக்கிய சந்திப்பு!
சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத், சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சின் பல்தரப்பு விவகாரங்களுக்கான பிரதி அமைச்சரும், பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான பொது கண்காணிப்பாளருமான கலாநிதி அப்துல்ரஹ்மான் அல்-ரஸ்ஸியை (Dr. Abdulrahman Al-Rassi) ரியாத்தில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் தலைமையகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இச்சந்திப்பின் போது, அண்மையில் உருவாக்கப்பட்ட ‘சவூதி-இலங்கை வர்த்தக சபை’, இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பிற்கான முன்மொழியப்பட்ட வீதி வரைபடம் மற்றும் சவூதி அரேபியாவின் தலைமையில் முன்னெடுக்கப்படும் ‘மத்திய கிழக்கு பசுமை முன்முயற்சி’ (Middle East Green Initiative – MGI) அமைப்பில் இலங்கையின் பிராந்திய பங்கேற்பு உள்ளிட்ட இருதரப்பு பொருளாதார உறவுகளின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து சவூதி பிரதி அமைச்சருக்கு தூதுவர் விளக்கமளித்தார்.
மேலும், சவூதியின் ‘விஷன் 2030’ (Saudi Vision 2030) இலக்குகளை முன்னோக்கி கொண்டு செல்வதில் இலங்கையின் பங்களிப்பையும் ஆதரவையும் அவர் வெளிப்படுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பல்தரப்பு விவகாரங்களில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதுடன், கலந்துரையாடப்பட்ட விடயங்களை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கும் உடன்பாடு காணப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வளர்ந்து வரும் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கும், புதிய வாய்ப்புகளைக் கண்டறிவதற்கும் இச்சந்திப்பு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
இச்சந்திப்பின் போது தூதரகத்தின் இரண்டாம் செயலாளரும் அலுவலகப் பிரதானியுமான திருமதி தமித்ரி சமங்கிகாவும் தூதுவருடன் உடனிருந்தார்.