இலங்கையின் மிக வயதான நபருக்கு 111 வயது; 92 பேரக் குழந்தைகள்!
இலங்கையில் உயிருடன் வாழும் மிக வயதான ஆணாகக் கருதப்படும் கரந்தெனிய, அங்குலுகல்ல பகுதியைச் சேர்ந்த பி.எச். மெனியல் தனது 111 ஆவது வயதை எட்டியுள்ளார்.
1915 ஜூன் 4 ஆம் திகதி பிறந்த இவர், 111 வயதிலும் சிறந்த நினைவாற்றலுடனும் மனத்தெளிவுடனும் ஆரோக்கியமாக வாழ்ந்து வருவதாக முதியோர் தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.
குடும்பத்தினரின் அன்பான பராமரிப்பு மற்றும் ஆதரவுடன் மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் அவர் வாழ்ந்து வருவதாகவும் அந்தச் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
ஒன்பது பிள்ளைகளின் தந்தையான மெனியலுக்கு ஐந்து மகன்களும் நான்கு மகள்களும் உள்ளனர்.
இவர்களில் மூத்த பிள்ளை உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய எட்டுப் பிள்ளைகளும் உயிருடன் ஆரோக்கியமாக உள்ளனர்.
மேலும், அவருக்கு 92 பேரக்குழந்தைகளும் 12 கொள்ளுப்பேரக்குழந்தைகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது நலன்களைப் பேணுவதற்குத் தேவையான பராமரிப்பு, வசதிகள் மற்றும் சமூகத் தொடர்புகளைப் பேணுவதற்கான வாய்ப்புகளை அவரது பிள்ளைகள் கூட்டாக வழங்கி வருவதாக முதியோர் தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.