Thursday, November 5, 2026

சிரியா – சவூதி அரேபியா பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து: $403 மில்லியனுக்கும் அதிகமான கடன் உதவியை அறிவித்தது ரியாத்

2 min read · 4 reads
Syrian President Ahmed al-Sharaa ​meets Saudi Crown Prince Mohammed bin Salman, in Riyadh, Saudi Arabia, November 4, 2026. Saudi NewsAgency/Handout via REUTERS THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY.
சிரிய ஜனாதிபதி  அகமது அல்-ஷரா (Ahmed al-Sharaa) மற்றும் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் முன்னிலையில், பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் உட்பட பல முக்கிய இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
மேலும், சிரியாவின் எரிசக்தி, வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் கட்டமைப்புத் துறைகளை மேம்படுத்துவதற்காக 403 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டாலர்களைக் கடனாக வழங்க சவூதி அரேபியா ஒப்புக்கொண்டுள்ளது.
ஒரே மாதத்தில் ஜனாதிபதி  அல்-ஷரா ரியாத்திற்கு மேற்கொண்ட இரண்டாவது அரசுமுறைப் பயணத்தின் போது, புதன்கிழமை இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சகங்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தமே அனைத்திலும் “மிகவும் குறிப்பிடத்தக்கது” என சிரிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் விரிவான விபரங்களை அமைச்சகம் வெளியிடவில்லை.
சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர பாதுகாப்பு அமைப்பான ‘மக்கா கூட்டணியில்’ (Mecca alliance) சிரியா இணைவது குறித்து பரிசீலித்து வருவதாக சிரிய வெளியுறவு அமைச்சர் ஆசாத் அல்-ஷைபானி தெரிவித்து சில நாட்களிலேயே இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆதரவுக்காக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை சவூதி அரேபியா நாடி வருகிறது. இந்நிலையில், பிராந்திய பாதுகாப்பு மற்றும் செங்கடல், பாப் அல்-மந்தேப் மற்றும் ஹோமுஸ் ஜலசந்தி பகுதிகளில் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து இரு தலைவர்களும் தீவிரமாக ஆலோசித்தனர்.
பாதுகாப்பு ஒப்பந்தம் தவிர, சவூதி வளர்ச்சி நிதியம் (SFD) மூலம் சிரியாவிற்கு சலுகை அடிப்படையில் $403 மில்லியன் கடன் வழங்க ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில்:
  • சேதமடைந்த சுகாதார மையங்களை சீரமைக்க – $100 மில்லியன்
  • வீடுகளை சீரமைக்க – $60 மில்லியன்
  • சிவில் பாதுகாப்புப் படையை வலுப்படுத்த – $105 மில்லியன்
  • அாலெப்போ (Aleppo) வெப்ப மின்நிலையத்தை புனரமைக்க – $90 மில்லியன்
  • டமாஸ்கஸ் மற்றும் இத்லிப் நகரங்களில் குடிநீர் திட்டங்களை மேம்படுத்த – $30 மில்லியன்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தொழில் துறை, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
டிசம்பர் 2024-இல் பஷார் அல்-அசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அகமது அல்-ஷரா அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து, சிரிய அரசின் முக்கிய ஆதரவு நாடாக சவூதி அரேபியா விளங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.