Monday, November 23, 2026

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் சோதனைகள்!

1 min read
Colombo city and his traffic

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நாட்டில் போக்குவரத்துச் சோதனைகள் மற்றும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த இலங்கை பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

இதன்போது, போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மதுபோதையில் வாகனம் செலுத்துதல் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் வாகனம் செலுத்துதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன.

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்குத் தேவையான போதியளவு மூச்சுப் பரிசோதனைக் கருவிகள் (Breathalysers) ஏற்கனவே பொலிஸ் நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சாரதிகளுக்கு எவ்வித முன்னறிவிப்புமின்றி தற்செயலான போதைப்பொருள் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், வீதி விபத்துக்களில் தொடர்புபடும் சாரதிகளும் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனரா என்பதைக் கண்டறிய பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

எனவே, மதுபோதையிலோ அல்லது போதைப்பொருள் பயன்படுத்திய நிலையிலோ வாகனங்களைச் செலுத்துவதைத் தவிர்க்குமாறு வாகன சாரதிகளிடம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், வீதி விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் போக்குவரத்துச் சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.