அமெரிக்கக் காங்கிரஸில் 2019ஆம் ஆண்டு கஷோகி கொலை தொடர்பான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டபின்னும் ட்ரம்ப் நிர்வாகம் இதை வெளியிடவில்லை.
சவுதியை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை கொலை செய்யும் திட்டம் சவுதியின் இளவரசர் முகமது பின் சல்மானின் அனுமதியிலேயே நடந்துள்ளது என அமெரிக்க உளவு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டிருந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலை தொடர்பான இந்த அறிக்கை தற்போது பைடன் நிர்வாகத்தில் வெளியாகியுள்ளது.
யார் இந்த ஜமால் கஷோகி?
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் வாஷிங்டன் போஸ்டில் காலம்னிஸ்டாக இருந்த ஜமால் கஷோகி, தனது திருமணத்திற்குத் தேவையான ஆவணங்களை பெறுவதற்காக 2018ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி இஸ்தால்புல்லில் உள்ள சவுதி தூதரகத்திற்குச் சென்றபோது சவுதி முகவர்களால் கொலை செய்யப்பட்டார்.
சவுதியை சேர்ந்த இவர், ஒரு காலத்தில் சவுதி அரசக் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தார். சவுதி அரசின் ஆலோசகராகவும் இருந்து வந்தார். ஆனால் அதன்பின் சவுதி அரசையும், இளவரசர் முகமது பின் சல்மானின் கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து வந்தார். தனது விருப்பத்தில் நாட்டைவிட்டுச் சென்று அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்டில் பணியாற்றி வந்தார். அதில் சவுதி அரசை விமர்சித்து கட்டுரைகளை எழுதினார்.
கஷோகி திருமணம் செய்து கொள்ள இருந்த ஹாட்டிஸ் சென்கிஸ் என்ற பெண் துருக்கியைச் சேர்ந்தவர். கஷோகி கொலை செய்யப்பட்ட தினத்தன்று இவரும் அவருடன் இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்திற்குச் சென்றிருந்தார். ஆனால் ஆவணங்களைப் பெற்று வர கஷோகி உள்ளே செல்ல இவர் வெளியே காத்திருந்தார்.
கஷோகியை கொலை செய்ய சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டதாகக் கூறி ஹாட்டிஸ் சென்கிஸ் அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
ட்ரம்பின் சவுதி உறவு!
கஷோகியின் கொலையில் சவுதியின் இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பு உள்ளது என்று கூறப்பட்டது. இருப்பினும் சவுதி அரசு, இளவரசர் சல்மான் அதை மறுத்துவந்தனர்
அமெரிக்கக் காங்கிரஸில் 2019ஆம் ஆண்டு கஷோகி கொலை தொடர்பான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டபின்னும் ட்ரம்ப் நிர்வாகம் இதை வெளியிடவில்லை. பில்லியன் டாலர் கணக்கில் சவுதிக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது. கஷோகியின் விஷயத்திற்காக அதனை விட்டுக் கொடுக்க முடியாது என்று தெரிவித்தார் ட்ரம்ப்.
கஷோகியின் கொலைக்குப் பிறகு சிஐஏ, இந்த கொலையை இளவரசர் சல்மான் ஆணையிட்டிருக்கலாம் எனத் தெரிவித்தது. ஆனால் இதுகுறித்து அமெரிக்காவோ அல்லது சிஐஏ அதிகாரிகளோ வெளிப்படையாகப் பேசவில்லை. ட்ரம்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐ.நாவின் விசாரணையாளர் ஒருவர் முகமது பின் சல்மானின் உத்தரவு இல்லாமல் இந்த கொலை நடந்திருப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் சவுதி அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு கஷோகியை கொலை செய்துள்ளது என்றும், கஷோகி கொலை குறித்தான வழக்காடல் நீதிக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவை உட்படப் பிரிட்டன், பிரான்ஸ், கனடா போன்ற நாடுகள் கஷோகியின் கொலையில் தொடர்புடைய சவுதியை சேர்ந்த நபர்கள் மீது தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இளவரசர் முகமது பின் சல்மான் மீது எந்த தடையும் விதிக்கவில்லை.
என்ன செய்யப் போகிறார் பைடன்?
தனது தேர்தல் பிரசாரத்தின்போது பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலைக்கு சவுதிதான் ஆணையிட்டது என்றும், அதேபோல சவுதிக்கு ஆயுதங்கள் விற்பதை நிறுத்தப்போவதாகவும் பைடன் தெரிவித்திருந்தார்.
சவுதியுடனான அமெரிக்காவின் உறவில் கடுமை காட்டப்படும் எனவும் தெரிவித்திருந்தார். அவர் கூறியதை போலப் பதவியேற்ற சில தினங்களில் ஏமன் போரில் சவுதி தலைமையிலான கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை நிறுத்துவதாகத் தெரிவித்தார். அதேபோல ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதிக்கு அமெரிக்க ஆயுதங்களை விற்பதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளார். இந்நிலையில்தான் அமெரிக்கா உலகளவில் மனித உரிமைகள் காக்கப்படுவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது என சில தினங்களுக்கு முன் சவுதி அரசரிடம் தொலைப்பேசியில் உரையாடியபோது தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சவுதி அரசர் சல்மானுடனான தனது தொலைப்பேசி உரையாடலில் பைடன் ஜமால் கஷோகியின் கொலை குறித்துப் பேசியதாகத் தகவல் ஏதும் வெளிவரவில்லை. சவுதியில் பல அமெரிக்க மனித உரிமை ஆர்வலர்கள் விடுவிக்கப்பட்டதை பைடன் வரவேற்றதாகவும், உலகளவில் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின்பால் நடைபெறும் ஆட்சிக்கு அமெரிக்கா அளிக்கும் முக்கியத்துவம் குறித்து பைடன் பேசியதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.
சவுதி மீது கடுமை காட்டப்படும் என அமெரிக்காவின் புதிய அதிபரான பைடன் தெரிவித்திருந்தாலும், உலகளவில் எண்ணெய் ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கும் சவுதியை சட்டென அமெரிக்கா ஒதுக்கி தள்ளிவிட முடியாது. அதேபோல இரானை ஒடுக்க சவுதியுடனான கூட்டணி அமெரிக்காவுக்குத் தேவைப்பட்டது. எனவே பைடன் சவுதியிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்றால் இதனைக் கவனத்தில் வைத்துக் கொண்டே முடிவுகளை எடுக்க வேண்டும்.
வெளியான அமெரிக்காவின் உளவுத் துறை அறிக்கை!
2017ஆம் ஆண்டிலிருந்து சவுதி அரசின் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்பு இளவரசர் சல்மானின் பொறுப்பில் இருப்பதால் இம்மாதிரியான ஒரு நடவடிக்கையை (கஷோகியின் கொலை) அவரின் அனுமதி இல்லாமல் சவுதி அதிகாரிகளில் செய்திருக்க முடியாது என அமெரிக்க உளவுத் துறை அறிக்கை தெரிவிக்கிறது.
இஸ்தான்புல்லில் கஷோகியை கொல்லவோ அல்லது பிடிப்பதற்கான திட்டத்திற்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஒப்புதல் வழங்கியுள்ளார்` என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
வெளிநாட்டில் தனது அரசை எதிர்ப்பவர்களை ஒடுக்க வன்முறை நடவடிக்கைகளை இளவரசர் மேற்கொண்டுவந்தார் என்பதால் அவர் இந்த கஷோகி குறித்தான திட்டத்திற்கு அனுமதி வழங்கியிருக்கலாம் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
என்ன சொல்கிறது சவுதி?
கஷோகியின் கொலையில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை எனத் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார் சவுதியின் இளவரசர். இருப்பினும் சவுதியில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும், குறிப்பாகப் பெண் உரிமை செயல்பாட்டாளர்கள் மீது அடக்குமுறைகளை அவிழ்த்துவிடுவதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் தற்போது அமெரிக்க உளவு முகமையின் இந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என சவுதி தெரிவித்துள்ளது. மேலும் இது `தவறான மற்றும் எதிர்மறையான` ஒரு அறிக்கை என்றும் சவுதி தெரிவித்துள்ளது.
கஷோகி கொலை குறித்த விசாரணைக்கு பிறகு, ஒரு பெரும் போராட்டத்தில் கஷோகிக்கு மருந்து ஒன்று கொடுக்கப்பட்டது என்றும், அது அதிக `டோஸ்` ஆகி அவர் உயிரிழந்தார் என்றும் சவுதி தெரிவித்தது. அதன்பின் அவரின் உடல்கள் வெட்டப்பட்டு உள்ளூரில் ஒருவரிடம் கொடுக்கப்பட்டது என்றும் சவுதி தெரிவித்திருந்தது.
முன்னதாக கஷோகியின் கொலை திட்டமிடப்பட்ட ஒன்று இல்லை என்று தெரிவித்திருந்தது சவுதி. மேலும் கஷோகியை சவுதிக்கு அழைத்து வர அனுப்பப்பட்ட குழுவின் தலைவரால் கஷோகிகொல்லப்பட்டார் என்றும் சவுதி அரசு தெரிவித்திருந்தது.
மேலும் 2019ஆம் ஆண்டு சவுதி நீதிமன்றம், கஷோகி கொலையில் ஈடுபட்டதாக ஐந்து பேருக்கு மரண தண்டனை வழங்கியது அதன்பின் அது இருபது ஆண்டுக்கால சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
துருக்கியின் நிலைப்பாடு என்ன?
சவுதியின் உளவு அதிகாரிகளால் வழிநடத்தப்பட்ட 15 பேர் துருக்கிக்கு வந்ததாகவும், அவர்கள் கஷோகியின் வருக்கைக்கு முன் பாதுகாப்பு கேமராக்களை அகற்றியதாகவும் துருக்கி தெரிவித்திருந்தது.
தூதரகத்தின் உள்ளே நுழையும்போதே கஷோகி மூச்சு திணறி உயிரிழந்ததாகவும் துருக்கியின் விசாரணையாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்த கொலை திட்டமிட்ட ஒன்று என்றும் துருக்கியின் அதிபர் எர்துவான் தெரிவித்திருந்தார்.
மேலும் கஷோகியின் கொலைக்கு சவுதியின் உயர்மட்ட அதிகாரிகளே காரணம் எனத் துருக்கி அதிபர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஜமால் கஷோகியின் விவகாரத்திற்குப் பின் துருக்கி மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
சவுதி இளவரசர் சல்மானின் முன்னாள் உதவியாளர்களுக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்று அவர்கள் விசாரிக்கப்பட்டிருந்தாலும், தற்போது வெளியாகியுள்ள இந்த அமெரிக்க உளவு முகமையின் அறிக்கை இளவரசர் சல்மானே கொலை திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியதாகத் தெரிவிக்கிறது.
நன்றி விகடன்