19.02.2021 வெள்ளிக் காலையில் என் வட்ஸ்அப் பெட்டிக்குள் பதுங்கியிருந்த செய்தி! (மீலாத்கீரன்)
இலட்சக்கணக்கான தமிழ் நேயர்களை தினமும் ரூபவாகினியின் மாலை 6.30 மணிச்செய்தி வாசிப்பால் கவர்ந்த அந்த இனியவர்தான் – தலைசிறந்த சிரேஷ்ட ஒலி/ஒளி பரப்பாளரும், ரூபவாகினி முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவுக்கான முன்னாள் தலைவரும், முன்னாள் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் உப தலைவருமான – ரஷீத் எம் ஹபீல் !
அவர் மரணத்தை – அச்செய்தியைக் கேள்வியுற்றதும், ஒருகணம் மனம் மரத்த உணர்வையடைந்தேன்!
அவருக்கும் எனக்குமிடையிலான ஆரம்பகால, இடைக்கால தொடர்புகளும், அவர்பற்றி நான் அறிந்தவையும் என் மனக்கண்முன் படமாக பரிணமித்துக் கொண்டிருந்த வேளையில், நண்பரும் பத்திரிகையாளருமான நௌஷாத் மொஹிதீனிடமிருந்து வந்தது – ஒரு கோல்!
“முஸ்லிம்களிடையே மரணித்த, உயிருடன் இருக்கும் பிரபல்யமானவர்கள் பற்றிய எந்தவிதமான வரலாற்றுப் பதிவுகளோ, குறிப்புகளோ, ஆவணப்படுத்தல்களோ பொதுவாக நம்மிடம் இல்லை; குறிப்பாக ஒருசிலரைத்தவிர! அதிலும் குறிப்பாக கொழும்பில் பிறந்து வளர்ந்து சாதித்து மரணித்தவர்கள் பற்றிய எந்த பதிவுகளும் பெரிதாக இல்லை! மாளிகாவத்தையிலுள்ள – பௌதீகவளம் கொண்ட ‘இஸ்லாமிய நிலையம்’கூட -இதைச்செய்யவில்லை!! கொழும்பில் பிறந்து வளர்ந்த எனக்குக்கூட இந்த ஆதங்கம் உண்டு.
ரஷீத் எம் ஹபீல் பற்றிய குறிப்புகளும் – இவ்வாறு இளம் சந்ததியினர் அறியாமல் இருக்கக் கூடாது. நான் அவரைப்பற்றிய ஆவணக்குறிப்புகளை தமிழிலும், சிங்களத்திலும் தொகுக்க உள்ளேன். அந்தவகையில், ஹபீல் நாநாவைப்பற்றி உங்களுக்குத் தெரிந்ததைப்பற்றி எழுதித் தரமுடியுமா ?” என்று வினயமாகவும் உரிமையுடனும் கேட்டார்.
அவரது வேண்டுகோளில் இருந்த நியாயத்தை உணர்ந்து சம்மதித்ததில் பிறந்ததே இக்குறிப்பு…
கொழும்பில் கீழ்மத்தியதர முஸ்லிம்கள் நிறைந்து வாழும் ஒரு பின்தங்கிய பிரதேசம் “மாளிகாவத்தை”. அங்கே, அன்னையை சிறுவயதில் பறிகொடுத்து ஏழு உடன்பிறப்புகளுடன் பறந்து வாழ்ந்தவர்தான் ஹஃபீல்.
பல ஆண்டுகளுக்கு முன்(1954) வானொலி ‘இஸ்லாமியப் பாடசாலை’யில் பங்கெடுத்து, 50 ஆண்டுகளுக்கு முன் (1971) “பகுதி நேரத் தமிழ் அறிவிப்பாளன்/செய்தி வாசிப்பாளன். 38 ஆண்டுகளுக்கு முன் (1983), “ரூபவாஹினி”யின் தயாரிப்பாளன். 28 ஆண்டுகளுக்கு முன் (1993) முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைமை. பின்னர் ஓய்வு.
ரேடியோ சிலோன் என்ற இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் காலம்:
நண்பர் ஹபீல் அவர்கள் ஒலிபரப்புத்துறையின் மூத்த புதல்வர்களில் ஒருவர். 1970 ஆம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பகுதி நேர அறிவிப்பாளராக இணைந்து கொண்ட அவர் பின்னர் தயாரிப்பாளராக முஸ்லிம் சேவையில் கடமையாற்றினார்.
வீ. அப்துல் கபூர், பி எச் அப்துல் ஹமீத், கே எஸ் ராஜா, நடராஜ சிவம், பீ. விக்னேஸ்வரன், ஜோர்ஜ் சந்திரசேகரன், ராஜேஸ்வரி சண்முகம், போன்ற மூத்த ஒலிபரப்பாளர்களுடன் தமிழ் சேவையில் அறிவிப்பாளாராகவும் பணியாற்றினார்.
அவரது மதுரக்குரலால், ஈர்க்கப்பட்டு சில மூத்த ஒலிபரப்பாளர்களே இவரது குரலில் மயங்கினார்கள்.
அவரது குரலை மிக மூத்த ஒலிபரப்பாளர்கள் பரராஜசிங்கம், கபூர் ஆகியோர் சிலாகித்துப் பேசக் கேட்டுள்ளேன், நானும் – 1970ன் முற்பகுதிகளில் ஒருதடவை….
நானும் வாப்பாவும் 1970களில் இ.ஒ. கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சிகள் செய்தகாலத்தில் நான் ஹபீலை அடிக்கடி சந்தித்ததுண்டு. மருதமலர் புரோக்ராம் ரெக்கோர்டிங் நடக்கும் வேளைகளில் சிலசமயம் ஸ்டுடியோவுக்கு வந்து கவனிப்பார். கேண்டீனில் நாம் இருவரும் தேநீர் அருந்தும்போதெல்லாம் என்னை பணம்கொடுக்க விடவேமாட்டார்…
அவ்வாறான ஒரு தேநீர் தருணத்தில்;
“நானும் பி.எச். அப்துல் ஹமீதும் ஒலிபரப்புத்துறைக்குள் வருவற்கு காரணமாக இருந்தவர் ஒரு முதுகெலும்புள்ள அரசியல் தலைமைத்துவம்” என்றார் அறிவிப்பாளர் ரஷீத் எம். ஹபீழ்.
“யார் அந்த முதுகெலும்புள்ள அரசியல் தலைமைத்துவம்” என்று கேட்டேன் .
“மூதூர் முதல்வர் மஜீத்” என்றார்.
மூதூர் மஜீத் அவர்கள் தகவல் தொலைத்தொடர்பு பிரதியமைச்சராக இருந்தபோது இரண்டு அறிவிப்பு ஜாம்பவான்களையும் ஊடகத்துறைக்குள் உள்ளீர்ப்பதற்கு நடத்திய போராட்டத்தையும் உங்கள் இருவருக்காகவும் என் பதவியைக்கூட இராஜினாமா செய்வேன் என்று அவர் கர்ஜித்ததாகவும் ஓர் ஆச்சர்யமான தகவலை என்னுடன் பகிர்ந்துகொண்டார்.
ரூபவாஹிக்காலம்…:
வானொலியில் இருக்கும்போதே, அனுபவசாலி என்றவகையில் – 1983ஆம் ஆண்டில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் செய்தி வாசிக்கும் வாய்ப்புக் கிட்டியது – இவருக்கு! அதனைத்தொடர்ந்து, வானொலியில் இருந்து விலகி முஸ்லிம் நிகழ்ச்சிகளை தயாரித்துக்கொண்டிருந்த மொஹிதீன் என்பவருடன் இணைந்து இவரும் தயாரிப்பாளரானார்.
பின்னர் ரூபவாஹினி முஸ்லிம் பிரிவின் தலைமைப்பதவி இவருக்கு கிடைத்தது.
முதன்முதலாக, ‘தயாரிப்பாளர்’ என்ற டெசிக்னேஷனுடன் ரூபவாஹினியில் வலது காலடி எடுத்துவைத்தபோது – சட்டென ஒரு பதட்டம் தோன்றிமறைந்தது – என்னுள்!
காரணம் எனக்கிருக்கும் கிரியேட்டிவிடியைத்தவிர, ஒளிபரப்பு ஃபீல்டில் முன் அனுபவம் இல்லையென்பதே! அந்த நேரத்தில் எனக்கு நினைவுக்கு வந்தவர் ரஷீத் எம் ஹபீல் மட்டுமே!!
ஃபோர்மாலிடீஸ் முடிந்து நான், ‘விவரணப்பிரிவுக்கு – ‘டொகியுமென்டரி யுனிட்டுக்கு -அனுப்பப்பட்டேன். அங்குதான் ‘முஸ்லிம் பிரிவும்’ ஹபீல் பொறுப்பில் இயங்கியது. யுனிட் ‘லொக்கா’ திரு. ரணசிங்கவிடம் என்னை அறிமுகம் செய்துவைத்தார்.
பின்னர், ‘வளர்பிறை’ சஞ்சிகை நிகழ்ச்சியின் தயாரிப்புப் பொறுப்பை தயக்கமின்றி உடனடியாகவே என்னிடம் ஒப்படைத்து, “Meelaud, l know you very well. You can do it. Show your talent” என்று தட்டிக் கொடுத்தார் – அதுதான் ஹஃபீல்! உதவியாளராக, இப்போதைய முஸ்லிம் பிரிவுப் பொறுப்பாளர் தம்பி யூனுஸையும் நியமித்தார்.
தயாரிப்பில் ஓபன் செக் தந்து என்னை தட்டி ஊக்குவித்தவர். என்விடயத்தில் இன்ரபியர் பண்ணியதேயில்லை. பொலிஸி மேட்டரில் ஏதாவது கொன்ரடிக்ஷன் வந்தால் மட்டும் வினயமாக அட்வைஸ் பண்ணுவார்; அந்தளவுக்கு என்மீது தானாகவே மரியாதையை – அன்பை வளர்த்துக் கொண்டவர்.
அவரிடம் இருந்த ஒரு சிறந்தகுணம் என்னவென்றால், சிலசமயங்களில் கருத்து மோதல்கள் வந்தபோதும் அதை மறந்துவிட்டு, அடுத்தகணமே ஓடிவந்து கரங்களை பற்றிக்கொண்டு ஸலாம் கூறும் இனிய பண்பாளர். அதிகம் வேடிக்கையாகப் பேசும் அவரது பண்பு அனைவரையும் பெரிதும் கவர்ந்தது. “மைடியர்…” என்று விளித்தே அழைப்பார் – அனைவரையும். அதனால் சக தமிழ், சிங்கள ஊழியர்களின் மனங்களை வென்றவர்.
ரூபவாஹினியில் பணியாற்றக் கிடைத்த மிகக்குறுகிய காலத்தில் ரஷீத் எம். ஹபீலுடனான ‘வேர்க்கிங் ரிலேஷன் ஷிப்’ மறக்கமுடியாத ஒன்று….
அவர் எப்போதும் சுறுசுறுப்புமிக்க துடிப்பான இளைஞராகவே இருந்தார். அன்பே உருவானவர், சிறந்த பண்பாளர், கருணையாளர். எல்லாவற்றுக்கும் அப்பால், மிக எளிமையானவர்.
பிற்காலங்களில்,
என்னை வீதிகளிலோ, விழாக்களிலோ –
எங்கு சந்தித்தாலும் ஓடிவந்து குசலம் விசாரித்து மகிழ்வார்.
இவர் எம்மை விட்டு பிரிந்தாலும்
இவரது
“அல்லாஹும்ம லகசும்து…” என்று தொடங்கும்
நோன்பு துறக்கும் நேரத்தில் ஓதுகின்ற தங்கக்குரல்
வரவிருக்கும் பல்லாண்டுகள் -ரமழான் மாதங்களில் இலங்கை முஸ்லிம்களின் வீடுகளிலெல்லாம் – ஒலித்துக்கொண்டே இருக்கும்…!!
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன் .அல்லாஹ் அன்னாரை பொருந்திக்கொள்வானாக….
யா அல்லாஹ்! அன்னாரது பிழைகளை மன்னித்து அவருக்கு ‘ஜன்னத்துல் ஃபிர்தௌஸி’ல் நல்லதொரு இடத்தினை வழங்குவாயாக!
ஆமீன்.
மீலாத்கீரன்
(21 பெப்ரவரி, 2021)
பின் குறிப்பு காலஞ்சென்ற சகோதரர் ஹபீழ் உடனான அனுபவம்பற்றி ஊடகத்துறை நண்பர்கள் எமக்கு எழுதலாம். பிரசுரிக்கத் தயாராக உள்ளோம். எழுதி அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் முகவரி newsnow.lk