இலங்கைக்கு இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இலங்கையின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை பிற்பகலில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
அப்போது இலங்கையில் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் முஸ்லிம் எம்.பிக்கள் முறையிட்டதாக அறிய முடிகிறது.
கொழும்பில் உள்ள ஷாங்ரிலா விடுதியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக அதில் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் பிபிசி தமிழிடம் கூறினார். முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுவது தொடர்பில் இம்ரான் கானிடம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையிட்டபோது, இதற்கான முடிவு கிட்டும் என தம்மிடம் இம்ரான் கான் கூறியதாக முஷாரப் தெரிவித்தார்.