வீட்டுச்சிறையில் துபாய் இளவரசி லத்தீஃபா… இந்தியாவுக்கு இருக்கும் தொடர்பு என்ன?

Date:

தற்போது லத்தீஃபா வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் இந்த வீடியோ லத்தீஃபா 2018ஆம் ஆண்டு தப்பிச் செல்ல முயன்று பின் துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு பேசிய வீடியோ.

துபாய் இளவரசியான லத்தீஃபா தனது தந்தையான துபாய் அரசர் தன்னை சிறைப்படுத்தி வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ள வீடியோ ஒன்றை பிபிசி தனது நிகழ்ச்சி ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளது.

“இந்த வில்லா (வசதிகொண்ட வீடு) சிறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நான் இதில் சிறைபிடிக்கப்பட்டுள்ளேன். இங்குள்ள அனைத்து ஜன்னல்களும் அடைக்கப்பட்டுள்ளன. வெளியே ஐந்து போலீஸ் நபர்களும், உள்ளே இருவரும் இருக்கின்றனர். நான் எங்கேயும் வெளியே செல்ல இயலாது” என லத்தீஃபா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசிய அந்த வீடியோவில் தனது உயிருக்கு ஆபத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லத்தீஃபா வெளியிட்டுள்ள அந்த வீடியோ அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வில்லாவின் குளியலறையில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இளவரசி லத்தீஃபா துபாய் அரசர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் 25 குழந்தைகளில் ஒருவர்.

2018ஆம் ஆண்டு இந்தியாவில் பிடிபட்ட கதை!

தற்போது லத்தீஃபா வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் இந்த வீடியோ லத்தீஃபா 2018ஆம் ஆண்டு தப்பிச் செல்ல முயன்று பின் துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு பேசிய வீடியோ.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு லத்தீஃபாவின் சகோதரி ஷாம்சா அரசக் குடும்பத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்றார். இருப்பினும் அவரை கண்டுபிடித்து மீண்டும் துபாய்க்கு அழைத்து சென்றனர்.

2018ஆம் ஆண்டுக்கு முன்னர், 2002ஆம் ஆண்டில் ஒரு முறை லத்தீஃபாவும் தப்பிச் செல்ல முயன்றார் அப்போது அவருக்கு வயது 16. இருப்பினும் அவர் மீண்டும் துபாய்க்குக் கொண்டுவரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இப்போது லத்தீஃபாவிற்கு 35 வயது. அதன்பிறகு லத்திஃபாவிற்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. லத்திஃபா பாஸ்போர்ட் வைத்திருக்கவும் துபாயை விட்டுச் செல்லவும் தடைவிதிக்கப்பட்டது. வாகனம் ஓட்டுவதற்கு அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.

2018ஆம் ஆண்டு தப்பிச் செல்ல லத்தீஃபா திட்டமிட்டபோது அவரின் தோழி ஃபின்லாந்தை சேர்ந்த டினா லத்திஃபாவுடன் உடன் வர முடிவு செய்யப்படுகிறது. டினா லத்திஃபாவிற்கு தற்காப்பு கலை சொல்லிக் கொடுக்க வந்தவர். இருவரும் தோழிகளாகி பின் தப்பிச் செல்லும் திட்டத்தில் லத்திஃபாவுடன் உடல் செல்ல திட்டமிடுகிறார் டினா.

திட்டமிட்டபடி டினாவும் லத்தீஃபாவும் சிறு படகு மற்றும் ஜெட் ஸ்கீயின் உதவியுடன் துபாயிலிருந்து சர்வதேச கடல் எல்லைக்குள் நுழைகிறார்கள் அங்கிருந்து அவர்கள் இந்தியாவிற்கு வந்து, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்று, அங்கு அரசியல் அடைக்கலம் கோரலாம் என லத்தீஃபா முடிவு செய்திருந்தார். ஆனால் இந்தியக் கடற்கரையில் அவர்களுக்குக் காத்திருந்தது வேறு ஒரு முடிவு.

ஆயுதம் ஏந்திய நபர்கள் சிலர் லத்தீஃபா மற்றும் அவரின் தோழியைப் பிடிக்க வந்தனர். இருவரும் குளியலறையில் மறைந்து கொண்டனர். ஆனால் அவர்களைப் பிடிக்கப் பயன்படுத்தப்பட்ட கிரேனேட் புகையால் அவர்கள் வெளியே வர வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அப்போதுதான் லத்திஃபாவின் தோழி டினா அவரை கடைசியாகப் பார்த்தார்.

லத்தீஃபாவின் தோழி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவர் இருவாரங்களாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது லத்தீஃபாவை விடுவிக்க வேண்டும் என அவர் ஒரு விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். மேலும் இதுகுறித்து சர்வதேச ஊடகங்களில் தெரிவித்த அவர், ஐ.நா-விற்கும் தெரியப்படுத்தினார்.

பின் ஒரு நாளில் திடீரென யாரோ ஒருவர் மூலம் லத்தீஃபா அவரை தொடர்பு கொண்டு தனது நிலையை விளக்கியுள்ளார். லத்தீஃபா அலைப்பேசி மூலம் தனது நிலையை ரெகார்ட் செய்து டினாவிற்கு அனுப்பியுள்ளார். டினா, லத்தீஃபாவின் உறவினர் ஒருவர் மற்றும் வழக்குரைஞர் ஒருவர் லத்திஃபாவுடன் தொடர்ந்து பேசி வந்திருக்கின்றனர். அதன்பின் ஒருநாள் லத்திஃபாவிடமிருந்து எந்த தகவலும் இல்லாத நிலையில்தான் தற்போது லத்திஃபா பேசி அவர்களுக்கு அளித்த இந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

2018ஆம் ஆண்டு லத்திஃபா துபாய்க்கு மீண்டும் அழைத்து வந்தபோது, லத்திஃபா குறித்த சர்வதேச அழுத்தங்களால் லத்திஃபாவின் புகைப்படத்தை வெளியிட்ட துபாய், லத்திஃபாவிற்கு தேவையான கவனம் அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தது.

அடுத்த ஆண்டு துபாய் அரசர் ஷேக் முகமதின் முன்னாள் மனைவியான ஹயா பிண்ட் அல் ஹூசைன், துபாயிலிருந்து தனது உயிருக்கு ஆபத்து எனப் பிரிட்டனிற்குத் தனது குழந்தைகளுடன் தப்பிச் சென்றார்.

ஷேக் முகமது தனது குழந்தைகள் துபாய்க்கு மீண்டும் அழைத்து வரப்பட வேண்டும் என உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆனால் தாய் ஹயாவுடனே லண்டனில் குழந்தைகள் வாழலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் 2002 மற்றும் 2018ஆம் ஆண்டு லத்திஃபாவை, ஷேக் முகமதுதான் வலுக்கட்டாயமாகத் துபாய்க்கு அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளார் என்றும், அவரின் சகோதரி இளவரசி ஷாம்சாவைவையும் சட்டவிரோதமாகக் கடத்தியுள்ளார் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

மேலும் ஷேக் முகமது `வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இல்லை` என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஹயா தொடர்பான அந்த வழக்கில் ஷேக் முகமதிற்கு எதிராக மொத்த தீர்ப்பும் அமைந்தது.

யார் இந்த துபாய் அரசர்?

துபாயை ஆளும் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமிற்கு 71 வயது. இவர்தான் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபராகவும் உள்ளார். 2006ஆம் ஆண்டு தனது சகோதரர் உயிரிழந்த பிறகு ஷேக் முகமது துபாயின் அரசரானார்.

1971ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சர் என்ற பொறுப்பையும் வகித்து வருகிறார் ஷேக் முகமது.

மத்திய கிழக்கில் துபாயை சுற்றுலாவிற்குப் புகழ்பெற்ற ஒரு நாடாகவும், வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் நாடாகவும் மாற்றிய பெருமை இவருக்கு உண்டு.

இவரின் ஆட்சிக் காலத்தில்தான் உலகின் உயர்ந்த கட்டடமான புர்ஜ் காலிஃபாவும் கட்டப்பட்டது.

பெரும் பணம் படைத்த ஷேக் மகமதிற்குக் குதிரை பந்தயம் என்றால் மிகவும் விருப்பம். கோடோல்ஃபின் என்ற குதிரை லாயத்திற்குச் சொந்தக்காரர் ஷேக் முகமது. மேலும் கோடோல்ஃபின் உலகளவில் மிகப்பெரிய ஒரு குதிரை பந்தய குழுவாகவும் உள்ளது.

தனது ஆறாவது மனைவி ஹயாவுடன் ஏற்பட்ட மண முறிவு குறித்து எந்த கருத்தையும் தெரிவித்திராத ஷேக் முகமது, ஒரு பெண்ணின் துரோகத்தால் அது நடந்தது எனக் கடுமையான வார்த்தைகள் கொண்ட கவிதை ஒன்றை இன்ஸ்டாகிராமில் அப்போது பதிவிட்டிருந்தார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...