இலங்கையில் இன மற்றும் சமய ரீதியான சிறுபான்மையினரின் மனித உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா இலங்கை அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதான பேச்சாளர் ஜலினா போர்டர் இது பற்றி தெரிவித்துள்ள கருத்தில் இலங்கையில் மனித உரிமைகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு ஐ.நா மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படடுள்ளதை நினைவு படுத்தி உள்ளார்.
இந்தத் தீர்மானத்துக்கு அமெரிக்கா இணை அனுசரணை வழங்கி உள்ளது. சர்வதேச சமூகம் இதற்கு ஆதரவு வழங்கி உள்ளது. இன ரீதியான மற்றும் சமய ரீதியான சிறுபான்மையினரின் உரிமைகள் மனித உரிமை காவலர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் உரிமைகள் என்பன பாதுகாக்கப்பட வேண்டும். கடந்த கால செயற்பாடுகள் மீது அர்த்தமுள்ள நம்பிக்கையுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நல்லிணக்கம் ஊக்குவிக்கப்பட வேண்டும், சகல மக்களுக்கும் சமத்துவமான நீதிக்கு இடமளிக்கப்பட வேண்டும் என்பன இந்தத் தீர்மானத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ள முக்கிய விடயங்களாகும் என்று அவர் நினைவு படுத்தி உள்ளார்.
எதிர்கால பொறுப்புக் கூறல் செயற்பாடுகளுக்குத் தேவையான சான்றுகளை சேகரிப்பதற்கான ஆணையும், மனித உரிமை செயற்பாடுகள் பற்றிய அறிக்கை இடலுக்கான அனுமதியும் மனித உரிமை ஆணையாளர் நாயகத்துக்கு இதன் மூலம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இன்று மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து எதிர்காலத்தில் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்தக்கும் வழியமைப்பதிலேயே இலங்கையின் நீண்டகால சுபிட்சமும் பாதுகாப்பும் தங்கி உள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதான பேச்சாளர் ஜலினா போர்டர் தெரிவித்துள்ளார்.