இஸ்ரேலில் கடந்த இரண்டு வருட காலத்தில் நான்காவது பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இன்று மக்கள் வாக்களிக்கின்றனர். கடந்த இரண்டு வருட காலத்தில் அடுத்தடுத்து இடம்பெற்ற மூன்று பொதுத் தேர்தலிலும் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை பெறத் தவறியதால் பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன் கலைத்து மீண்டும் மீண்டும் பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போதைய பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாஹூ தனது கூட்டணிக் கட்சிகளின் போதிய ஆதரவைப் பெறத் தவறியதால் அடுத்தடுத்து தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்றும் கூட மிக மோசமான ஊழல், மோசடி, லஞ்சம் மற்றும் நம்பிக்கைத் துரோகம் என பல குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையிலேயே நெத்தன்யாஹூ தேர்தலை சந்திக்கின்றார். அவருக்கு எதிரான சட்டபூர்வமான விசாரணைகள் இன்னும் இருவாரங்களில் தொடங்கவுள்ள நிலையில் இன்றைய தேர்தல் இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.