ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 11 பேர் காயம் அடைந்துள்ளனர். அரசாங்க ஊழியர்கள் பயணம் செய்து கொண்டிருந்த வண்டி ஒன்றை இலக்கு வைத்து வீதி ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் வன்முறைகளில் ஈடுபட்டு வரும் தலிபான் அமைப்புடன் சமாதானச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையிலும், தலிபான்களின் வன்முறைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கிலும் ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் ஆப்கான் அரசு, தலிபான் அமைப்பு, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையில் இன்று பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் தகவல் தொழில்நுட்ப அமைச்சு தனது ஊழியர்களின் பயணத் தேவைக்காக வாடகைக்கு அமர்த்தியுள்ள பஸ்ஸை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.