ஜெனீவாவில் இந்திய நிலைப்பாட்டிலும் அரபு உலக ஆதரவிலும் ஊசலாடும் இலங்கையின் கௌரவம்

Date:

இலங்கை அரசாங்கம் இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தனக்கு எதிரான ஒரு தீர்மானத்துக்கு முகம் கொடுத்துள்ளது. இந்த தீர்மானத்தின் வாசகங்கள் இலங்கை நிலைபற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பித்துள்ள அறிக்கையின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. இந்த அறிக்கை முற்று முழுதாக இலங்கைக்கு பாதகமான நிலைப்பாட்டைக் கொணடுள்ளது என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே. இலங்கை அரசு அதளை ஒட்டு மொத்தமாக நிராகரித்துள்ளது. மனித உரிமைப் பேரவையின் ஏனைய உறுப்பு நாடுகளும் இதை திட்டவட்டமாக நிராகரிக்க வேண்டும் என இலங்கை அரசு பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்தது. ஆனால் அவை எதுவும் எடுபடாத நிலையில் இலங்கை அரசு மேற்கொண்ட இராஜதந்திர முயற்சிகள் யாவும் தோல்வி கண்ட நிலையிலேயே தீர்மானத்தின் இறுதி வடிவம் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு இன்று வாக்கெடுப்புக்கு வரவுள்ளது.
இனி இந்த வாக்கெடுப்பை சந்திப்பதை தவிர வேறு தெரிவுகள் எதுவும் இலங்கைக்கு கிடையாது. இலங்கை மனித உரிமை மீறல் செயல்பாடுகள் மீது கவனம் செலுத்தத் தவறி உள்ளது. யுத்தக் குற்றங்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அது கண்டு கொள்ளவே இல்லை. இதனால் இலங்கை இப்போது ஒரு ஆபத்தான பாதையில் சென்று கொண்டு உள்ளது. இந்த நிலைமையானது இதேபோன்ற கொள்கைகளும் குற்றங்களும் இனிமேலும் தொடர வழியமைக்கக் கூடும் என்ற ரீதியில் இலங்கையை கண்டிக்கும் வகையில் தான் இந்தத் தீர்மானம்  அமைந்துள்ளதாகத் தெரிய வருகின்றது.
இதற்கு முன்னரும் இலங்கை அரசுக்கு எதிராக இதுபோன்ற தீர்மானங்கள் இதே அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ளன. சுமார் 12 வருடங்களுக்கு முன் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டது முதல் இது தொடருகின்றது. இந்தக் காலப் பகுதியில் ஐந்து வருடங்களுக்கு முன்னர் நல்லாட்சி என்று கூறப்பட்ட ஆட்சி இருந்த போது மட்டும் தான் இலங்கை அரசு சர்வதேச சமூகத்தின் கருத்துக்களுக்கு செவி மடுத்து தன் மீது கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு தானும் இணை அனுசரணை வழங்கியது. அதனால் அந்தத் தீர்மானத்தின் வார்த்தைப் பிரயோகங்கள் மெத்தனமாக அமைந்தன. ஆனால் இந்த அரசு பதவிக்கு வந்ததும் அந்தத் தீர்மானத்துக்கான இணை அனுசரணையில் இருந்து தான் வாபஸ் பெற்றுக் கொள்வதாகப் பகிரங்கமாக அறிவித்து அதன் கடப்பாடுகளில் இருந்து வெளியேறியது. இன்றைய அரசைப் பொறுத்தமட்டில் இத்தகைய தீர்மானங்கள் வெறுமனே வெளிநாட்டுத் தலையீடுகளாகவே நோக்கப்படுகின்றன. இந்த நிலைப்பாடுதான் இன்றைய தீர்மானத்தின் சொற்பிரயோகம் கடினமாக அமையக் காரணமாயிற்று
இத்தகைய தீர்மானங்கள் இதற்கு முன்னரும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இவை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது என்னவோ உண்மைதான். ஆனால் ஒரு தேசம் என்ற வகையில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத தேசம் என்ற ஒரு மாயை உலகில் ஏற்படுத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். அது சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் அவமானத்தையே கொண்டு வரும்.
இந்தத் தீர்மானத்தை தவிர்க்க அல்லது இன்றைய வாக்கெடுப்பில் வெற்றி பெற இலங்கை அரசு மேற்கொண்ட ராஜதந்திர முயற்சிகள் எல்லாமே புஷ்வானமாகிவிட்டன. ஜெனீவாவில் இலங்கை விடயத்தை கையாளும் ராஜதந்திரி, இலங்கையில் அந்த விடயங்களைக் கையாளும் பிரதான ராஜதந்திரியான வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஆகியயோரின் செயற்பாடுகள் இங்கே குறிப்பிட முடியாத அளவுக்கு நகைப்புக்கரியதாகி உள்ளன.
இந்த நிலையில் கடைசி நேரத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நேரடியாகக் களமிறங்கி அரபு லீக் செயலாளர் மற்றும் அரபு நாடுகளின் தலைவர்கள் ஆகியோருடன் நேரடியாக தமக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுள்ளனர். உள்ளுரில் உஷார் மடையர்களைக் குஷிப்படுத்துவதில் மட்டுமே குறியாக இருந்த அரச உயர் பீடம் இப்போது அரபு நாடுகளிடம் கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இம்ரான் கானின் இலங்கை விஜயம், எமது பிரதமரின் பங்களாதேஷ் விஜயம் என்பனவும் இந்த விடயத்தோடு தொடர்புபட்டதாகவே அமைந்துள்ளது. சீனாவின் செல்வாக்கோடு அரபு நாடுகளைக் கைக்குள் போட்டு இதில் அவர்களின் ஆதரவோடு வெற்றி பெறலாம் என்ற இறுதிக் கட்ட வியூகத்தை அரசு வகுத்துள்ளது. ஆனால் இங்கும் கூட மறுபுறத்தில் இந்தியாவின் முக்கியத்துவம் மறக்கப்பட்டுள்ளது கவலைக்குரியதாகவே உள்ளது.
சீனாவின் ஆதிக்கம் இலங்கைக்குள்ளோ அல்லது தெற்கு ஆசியப் பிராந்தியத்திலோ மேலோங்கி வரும் நிலையை இந்தியா ஒரு போதும் சகித்துக் கொள்ளாது. இதில் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கோட்பாட்டின் கீழ் அமெரிக்காவும் அதை விரும்பாது. அது மட்டும் அன்றி இந்தியாவில் தமிழ்நாடு மாநில சட்டசபைத் தேர்தல் ஏப்பிரல் மாதம் ஆறாம் திகதி இடம்பெறவுள்ளது. தமிழ் நாட்டில் தொடர்ந்து இரண்டு தடவைகள் வெற்றி பெறு;று ஆட்சி அமைத்துள்ள அஇஅதிமுக உடன் மோடியின் பிஜேபி இம்முறை கைகோர்த்துள்ளது.
தமிழ் நாட்டில் வெற்றி பெறக் கூடிய அணியோடு கூட்டமைத்து தனது ஆதிக்கத்தை தமிழ் நாட்டிலும் விரிவு படுத்த வேண்டும் என்பது தான் மோடியின் இந்த கூட்டணிக்கான முக்கிய காரணம். அது பலிக்க வேண்டுமானால் ஜெனீவாவில் இன்று மோடி அரசு எடுக்கின்ற முடிவு அதில் முக்கிய பங்கு வகிக்க முடியும். ஜெனீவா தீர்மானம் பெரும்பாலும் இலங்கைத் தமிழ் தரப்போடு சம்பந்தப்பட்ட ஒரு விடயம். எனவே மோடி அரசு இன்று எடுக்கின்ற முடிவு தமிழ் நாட்டில் அதன் நிலையில் மட்டும் அல்ல அஇஅதிமுக வின் நிலையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே தமிழ் நாட்டை இழக்கத் தயாரில்லாத மோடி அரசு இன்று ஜெனீவாவில் எடுக்கவுள்ள நிலைப்பாடு மிக முக்கியமாக அவதானிக்கப்படுகின்றது.
ஒன்று சீனாவின் ஆதிக்கத்தை தடுத்தல் மற்றது தமிழ் நாட்டை வசமாக்கல் அதற்கு அடுத்த படியாக இலங்கையிலும் தனது கட்சியின் பெயரில் கிளை ஒன்றைத் திறந்து இலங்கை தமிழ்; பிரதேச அரசில் நேரடி பங்கேற்கும் திட்டம் என்பன காரணமாக இந்தியா ஒன்றில் ஜெனீவா வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்கலாம் அல்லது எதிர்த்து வாக்களிக்கலாம் என்றே பெரும்பாலும் ஊகங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு நிலைப்பாடுமே இலங்கையை தர்மசங்கடமான ஒரு நிலைக்கே தள்ளும்.
அரபு நாடுகளுடனான இலங்கைத் தலைவர்களின் பேச்சுக்கள் சமயயோசிதமானவை தான். ஆனால் இதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் அரபு உலகத் தலைவர்களுக்கும் ராஜதந்திரிகளுக்கும் கிடையாது என எண்ணுவது அந்த நாடுகளையும் அவற்றின் ராஜதந்திரத்தையும் குறைத்து மதிப்பிடும் செயலாகும். எனவே இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் அரபு உலகின் நிலைப்பாடு என்பனவற்றில் தான் இன்று இலங்கையின் கௌரவம் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது என்பது வெள்ளிடைமலையாகும்.
Mohamed Naushad Mohideen

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...