யாழ்ப்பாணத்தில் தொடர் போராட்டம் நடத்தி வரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களை நேரில் சந்தித்துப் பேசிய அமைச்சர் மஹிந்தானந்த, ஜனாதிபதியை அவர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.
இதன்போது, போராட்டக்காரர்களைச் சந்திக்க அமைச்சர் மஹிந்தானந்தவுடன் சென்ற அங்கஜன் எம்.பிக்கு சுகாதாரத் தொண்டர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.நிரந்தர நியமனத்தில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி கடந்த 17 நாட்களாக வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
நேற்றைய தினம் அவர்கள் யாழ். மாவட்ட செயலகத்தின் நுழைவாயிலை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அச்சமயம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பங்கேற்றுத் திரும்பிய விவசாய அமைச்சர் மஹிந்தானந்த போராட்டக்காரர்களை சந்தித்துப் பேசினார். இதன்போதே, அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியை நேரில் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதியளித்தார்.
இதேவேளை, சுகாதாரத் தொண்டர்களுடன் பேசுவ தற்காக அமைச்சர் மஹிந்தானந்த சென்றபோது யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் சென்றிருந்தார். அவரின் வருகைக்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
“17 நாட்களாக நாம் போராடி வருகின்ற நிலையில் ஒருநாளும் எட்டிப் பார்க்காதவர். அமைச்சர்கள் எங்க ளைச் சந்திக்கும் போது எதற்கு வந்து நிற்கிறீர்கள்” என்று போராட்டக்காரர்கள் அங்கஜன் எம்.பியிடம் இதன்போது கேள்வியும் எழுப்பினர்.