கொரோனா தொற்று காரணமாக கடந்த சுமார் ஒரு வருட காலமாக அரசாங்க ஊழியர்களுக்கு தத்தமது வீடுகளில் இருந்து பணி புரிவதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றோடு முடிவுக்கு வருவதாகவும் நாளை முதல் சகல அரசாங்க ஊழியர்களும் தத்தமது
அலுவலகங்களுக்கு பணிக்காக திரும்ப வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதிய சுற்றுநிருபம் ஒன்று
வெளியிடப்பட்டுள்ளது .
பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் இந்த சுற்று நிருபத்தை அனுப்பி வைத்துள்ளார். அதன் பிரகாரம் சகல அரசாங்க ஊழியர்களும் நாளை முதல் தமது கடமை இடங்களுக்கு வேலைக்காக வருகை தருவது அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வேலைக்கு வராமல் இருப்பவர்கள் உரிய தினங்களுக்கு லீவு எடுக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்று நிருபத்தின் படி அலுவலகத்துக்கு வேலைக்கு வரும் ஊழியர்களுக்கு தேவையான சுகாதார பாதுகாப்பினை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது அந்தந்த அலுவலக பிரதானிகளின் கடமையாக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த அரசு அலுவலகங்களுக்கு தமது தேவைகளுக்காக வரும் பொது மக்களுக்கும் அதே போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அலுவலக பிரதானிகளின் கடமையாக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புதிய சுகாதார நெறிமுறைகளும் அரசாங்க அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .